Published : 17 Apr 2021 09:19 AM
Last Updated : 17 Apr 2021 09:19 AM

பல்கலை வித்தகரை இயற்கை அவசரமாகப் பறித்ததோ.. விவேக் மறைவையொட்டி ஸ்டாலின் வேதனை

பல்கலை வித்தகரும், கருணாநிதியின் தனி அன்பு கொண்டவருமான விவேக்கை இயற்கை அவசரமாகப் பறித்துக் கொண்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சின்னக் கலைவாணர் எனத் திரையுலகில் புகழ்பெற்ற நகைச்சுவைக் கலைஞர் விவேக் அவர்களின் மறைவுச் செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. பல்கலை வித்தகராக விளங்கிய விவேக் தனது தனித்துவமான நடிப்பாற்றலால் நகைச்சுவையுடன் விழிப்புணர்வையும் மக்களுக்கு வழங்கியவர். பத்மஸ்ரீ விருது பெற்ற பெருமைக்குரியவர். தலைவர் கலைஞரிடம் தனி அன்பு கொண்டவர். மரம் நடுதல் போன்ற சூழலியல் சார்ந்த சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இன்னும் பல சாதனைகளை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் படைத்த நடிகர் விவேக்கை இயற்கை இத்தனை அவசரமாக ஏன் பறித்துக் கொண்டதோ!" என வேதனையைப் பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் பாலச்சந்தரின் 'மனதில் உறுதி வேண்டும்' திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் விவேக். தான் நடித்த படங்களில் நகைச்சுவை காட்சிகளில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை எடுத்துக் கூறியதால் 'சின்ன கலைவாணர்' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர். இதுவரை 220க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதேபோல் குடியரசு மறைந்த முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் கருத்துகளை மாணவர்களிடையே கொண்டு செல்வதில் முக்கியப் பங்காற்றியவர். சுற்றுச்சூழல் தொடர்பாகவும் அமைப்புகளை வைத்து மரம் நடுதலை ஊக்குவித்தவர்.

முன்னதாக, மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக்குக்கு எக்மோ கருவி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவரது உயிர் மருத்துவர்களின் முயற்சியை மீறியும் அவரது உயிர் பிரிந்தது.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சாலிகிராமம் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணியளவில் மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

விவேக்கின் உடலுக்கு பொதுமக்களும், திரைப் பிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x