நகைச்சுவை மூலம் சமுதாய சிந்தனைகளை விதைத்தவர் விவேக்: தமிழிசை சவுந்தரராஜன் புகழஞ்சலி

நகைச்சுவை மூலம் சமுதாய சிந்தனைகளை விதைத்தவர் விவேக்: தமிழிசை சவுந்தரராஜன் புகழஞ்சலி
Updated on
1 min read

மறைந்த நடிகர் விவேக் நகைச்சுவை மூலம் சமுதாய சிந்தனைகளை மக்களிடம் எடுத்துச் சென்றவர் என தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சகோதரர் பத்மஸ்ரீ விவேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் சமுதாய சிந்தனைகளை மக்களிடம் எடுத்துச் சென்று மக்களால் சின்னக் கலைவாணர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.

சிறந்த சுற்றுச் சூழல் ஆர்வலராக பல இலட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்து இயற்கை வளங்களை பாதுகாத்துள்ளார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்" தெரிவித்துள்ளார்.

மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக்குக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எக்மோ கருவியில் இருந்த அவருக்கு இன்று காலை மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவர்களின் முயற்சியை மீறியும் அவரது உயிர் பிரிந்தது.

அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது சாலிகிராமம் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணியளவில் மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in