Published : 17 Apr 2021 07:45 AM
Last Updated : 17 Apr 2021 07:45 AM

நடிகர் விவேக் மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு பேரிழப்பு: டிடிவி தினகரன் இரங்கல்

நடிகர் விவேக் மறைவு தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பு என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது மறைவு திரையுலகிற்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்திற்குமே பேரிழப்பாகும்.

அந்தளவுக்கு சமூக அக்கறை கொண்ட சிந்தனையாளராகவும், செயற்பாட்டாளராகவும் திரு.விவேக் திகழ்ந்தார். “சனங்களின் கலைஞன்” எனக் கொண்டாடப்படும் அவரது பெருமைகள் என்றைக்கும் நிலைத்து நிற்கும்.

விவேக் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

மாரடைப்பால் மரணம்:

நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று காலை சாலிகிராமத்தில் உள்ள அவரின் வீட்டில் இருந்தபோது அவருக்கு லேசாக நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தார் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தில் வீட்டிலிருந்து வடபழனி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதய சிகிச்சை நிபுணர்கள் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் ரத்த நாள அடைப்பைக் கண்டறியும் ஆஞ்சியோ சிகிச்சையும், இதயச் செயல்பாட்டை அதிகரிக்க, இயல்பு நிலைக்குக் கொண்டுவர எக்மோ சிகிச்சை அளிக்கப்பபட்டது. இந்நிலையில் இன்று காலை 5 மணி அளவில் மீண்டும் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டது, மருத்துவர்கள் தீவிரமாக முயன்றும், அவரைக் காப்பாற்ற முடியவி்ல்லை. அவரின் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 59.

பத்ம ஸ்ரீ விருது பெற்ற அவர், நகைச்சுவையிலும் சமூக சிந்தனையை விதைத்ததற்காக சின்னக் கலைவாணர் என அழைக்கப்பட்டார்.

அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பொதுமக்களும், கலைஞர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x