நடிகர் விவேக்: கோப்புப்படம்
நடிகர் விவேக்: கோப்புப்படம்

மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் காலமானார்

Published on


மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று அதிகாலை காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று காலை சாலிகிராமத்தில் உள்ள அவரின் வீட்டில் இருந்தபோது அவருக்கு லேசாக நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தார் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தில் வீட்டிலிருந்து வடபழனி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதய சிகிச்சை நிபுணர்கள் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் ரத்த நாள அடைப்பைக் கண்டறியும் ஆஞ்சியோ சிகிச்சையும், இதயச் செயல்பாட்டை அதிகரிக்க, இயல்பு நிலைக்குக் கொண்டுவர எக்மோ சிகிச்சை அளிக்கப்பபட்டது. இந்நிலையில் இன்று காலை 5 மணி அளவில் மீண்டும் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டது, மருத்துவர்கள் தீவிரமாக முயன்றும், அவரைக் காப்பாற்ற முடியவி்ல்லை. அவரின் உயிர் பிரிந்தது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர் விவேக் (59) தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைப் பூர்வீகமாகக் கொண்டவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்த நடிகர் விவேக் 1990களில் இயக்குநர் பாலச்சந்தரால் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டார். நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர் எனப் பன்முகத்தன்மை கொண்ட நடிகர் விவேக். சிறந்த மேடைப் பேச்சாளர்.

திரைப்படங்களை நகைச்சுவையாகக் கொண்டு செல்லாமல் சமூக அக்கறை உள்ள கருத்துகளை நகைச்சுவை மூலம் மக்களிடையே விவேக் கொண்டு சென்றார்.

அவரது சமூக சீர்திருத்தக் கருத்துகளால் ’சின்ன கலைவாணர்’ என்று அழைக்கப்பட்டார். சினிமாவைத் தாண்டி சமூக அக்கறை உள்ள விஷயங்களைக் கையிலெடுத்துச் செயல்படுத்தினார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது பற்று கொண்டதால் மரம் நடுவதில் ஆர்வம் காட்டி தமிழக அரசின் டெங்கு விழிப்புணர்வு, கரோனா விழிப்புணர்வு, கரோனா தடுப்பூசி விழிப்புணர்வுக்குப் பிரச்சாரம் செய்தார் விவேக் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்கு மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in