Published : 17 Apr 2021 03:13 AM
Last Updated : 17 Apr 2021 03:13 AM

வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள வளாகத்தில் மடிக்கணினியுடன் நுழைந்த பேராசிரியர்கள் வெளியேற்றம்: மதுரை அருகே திமுக வேட்பாளர்கள் அளித்த புகாரால் நடவடிக்கை

மதுரை அருகே வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் மடிக்கணினியுடன் சென்றபேராசிரியர்கள், திமுக வேட்பாளர்களின் எதிர்ப்பால் வெளியேற்றப்பட்டனர்.

மதுரை நாகமலைப் புதுக்கோட்டை அருகேயுள்ள கீழக்குயில்குடியில் அண்ணா பல்கலைக்கழக மதுரை மண்டல அலுவலகம் உள்ளது. இங்கு உசிலம்பட்டி, சோழவந்தான் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. மூன்றடுக்குப் பாதுகாப்பு மற்றும் கட்சியினரின் கண்காணிப்புடன் இந்த வளாகம் உள்ளது.

நேற்று காலை 11 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் மடிக்கணினியுடன் முப்பதுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் வந்தனர். மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தப் போவதாகக்கூறி அடையாள அட்டையுடன் வந்ததால் போலீஸாரும் அனுமதித்தனர்.

வந்தவர்கள் யார் எனத் தெரியாத நிலையில் இதுகுறித்து அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த திமுக முகவர்கள் சோழவந்தான் தொகுதி திமுக வேட்பாளர் வெங்கடேசனுக்கு தகவல் அளித்தனர். அவரும் உசிலம்பட்டி திமுக வேட்பாளர் கதிரவனும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்கு வந்தனர். அவர்கள்2 தொகுதி தேர்தல் அலுவலர்களுக்கும், ஆட்சியருக்கும் தகவல் அளித்தனர்.

தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஜஸ்டின் ஜெயபால்(சோழவந்தான்), ராஜ்குமார் (உசிலம்பட்டி), சமயநல்லூர் டிஎஸ்பி ஆனந்த ஆரோக்கியராஜ் ஆகியோர் வேட்பாளர்களுடன் பேசினர்.

இதுகுறித்து வேட்பாளர் வெங்கடேசன் கூறும்போது, ‘பேராசிரியர்கள் வருவது குறித்து எந்தத்தகவலும் எங்களுக்கு இல்லை.இது பல வழிகளில் சந்தேகத்தைஏற்படுத்துகிறது. பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ள வளாகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் சுயமாகச் செயல்பட அனுமதித்தது யார்? இதுகுறித்து நாளை (இன்று)மாவட்ட ஆட்சியர், தேர்தல் ஆணையத்துக்குப் புகார் அளிக்கப்படும். எங்கள் கண்டிப்பைத் தொடர்ந்துபேராசிரியர்கள் வெளியேற்றப்பட்டனர்’ என்றார்.

நேற்று முன்தினம் இதுபோன்ற சம்பவம் ராமநாதபுரத்திலும் நடந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x