

பல்வேறு மாநிலங்களில் இருந்து சென்னை வந்த 1,578 டன் நிவாரணப் பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
சென்னையில் கடந்த டிசம்பர் 1-ம் தேதி பெய்த கனமழையால், மாநகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதந்தது.
பல்வேறு சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வெள்ளத்தில் சிக்கிய மக்கள் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவ்வாறு 97 நிவாரண முகாம்களில் 62 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டனர். மேலும் லட்சக்கணக்கானோர் வீடுகளில் முடங்கினர்.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ, பல்வேறு நிறுவனங்கள், அமைப்பு கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து உணவு பொருட்கள் மற்றும் ஆடைகள் என குவிந்தன. அவை சென்னை மாநகராட்சி சார்பில் பெறப்பட்டு, நேரு உள் விளையாட்டரங்கில் பிரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இப்பணியில் 500 மாநகராட்சி ஊழியர்களும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் ஈடுபட்டனர்.
நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணி நிறைவு பெற்றுள்ள நிலையில், இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘பல்வேறு பகுதிகளில் இருந்து இதுவரை 1,578 டன் நிவாரணப் பொருட்கள் பெறப்பட்டன. அவை அனைத்தும் வெள்ளத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட சுமார் 4 லட்சம் குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
இத்தருணத்தில் பொருட்களை வழங்கியவர்களுக்கும், அதை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க உதவிய தன்னார்வலர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.