

கரும்பு விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''சர்க்கரை உற்பத்தியில் நாட்டிலேயே 4-வது இடத்தில் தமிழகம் இருந்தது. ஆனால், மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கை முடிவுகளால் கரும்பு விவசாயமே தமிழகத்தில் அழிந்து போகும் சூழல் உள்ளது. 3.35 லட்சம் ஏக்கர் கரும்பு 2011-12 -ல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. ஆனால், இப்போதோ அது 2.55 லட்சம் ஏக்கராக குறைந்துள்ளது. அதேபோல சர்க்கரை உற்பத்தி 24.43 லட்சம் டன்னிலிருந்து 13 லட்சம் டன்னாக படுபாதாளத்தில் விழுந்துள்ளது.
தமிழகத்தில் தனியார் கரும்பு ஆலைகளும், அரசு பொதுத்துறை ஆலைகளும் விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.1500 கோடியாக கடந்த 2 வருடங்களாக வழங்கப்படாமல் உள்ளது. ஒருபக்கம் வெள்ளத்தால் பாதிப்பு, இன்னொரு பக்கம் சாகுபடி செய்யப்பட்ட கரும்புக்கு உரிய விலை கிடைக்காதது என கரும்பு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு டன் கரும்புக்கு மத்திய அரசு சார்பில் ரூ.2 ஆயிரத்து 100 ஆகவும், அந்த தொகையுடன் மாநில அரசு கூடுதலாக ரூ.450 சேர்த்து ரூ.2 ஆயிரத்து 550 என்று 2013-2014 ஆண்டில் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், மாநில அரசு தனது விலையை இப்போது ரூ.350 ஆக்கியுள்ளது. இந்நிலையில் உரவிலை, வெட்டுக்கூலி, போக்குவரத்து செலவு, மின்வெட்டு போன்ற காரணங்களால் கரும்பு விவசாயம் நஷ்டமடைகிற தொழிலாக மாறி வருகிறது.
தமிழக கரும்பு ஆலைகள் உற்பத்தி செய்யப்படுகிற மின்சாரத்தை பல நேரங்களில் வாங்க மறுக்கும் தமிழக அரசு, தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்குகிறது. எனவே, தமிழக கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.1,500 கோடி நிலுவைத் தொகை மற்றும் 2015-16 ஆண்டுக்கான கரும்பு விலை நிர்ணயம் செய்யாமல் இருப்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து விவசாய சங்கங்கள் நடத்துகிற போராட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது.
இப்பிரச்சினைக்கு தீர்வு காண கரும்பு விவசாயிகள், கரும்பு ஆலைகள், தமிழக அரசு அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார்.