

கோவையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிலர் சென்னை, கடலூர் வெள்ள நிவாரணத்துக்காக நிதியும், உதவிப் பொருட்களும் திரட்டி வந்து ஆட்சியரிடம் அளித்தனர். 10 வயதுக்குட்பட்ட இந்த மாணவர்களின் மனித நேயம், சமூகப் பார்வை, பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
பொதுமக்கள் குறைகேட்பு முகாம் கோவை ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் திங்கள்கிழமை நடந்தது. ஏராளமான பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை காந்திமாநகரைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவர்கள் லக்ஷ்மிவிஷ்ணு, கிஷோர், சஞ்சய், ராகுல் 5-ம் வகுப்பு மாணவர் ஜெகன்நாதன் மற்றும் 3-ம் வகுப்பு மாணவி தக்சினி ஆகியோர் ரூ.2700 வரைவோலையையும், 80 துண்டுகள் அடங்கிய பண்டிலையும் எடுத்துக் கொண்டு ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.
கடந்த சில நாட்களாக தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களை பார்த்து மனம் கசிந்து சுற்றுப்பகுதியில் உள்ள மாணவர்கள் 10 பேர் சேர்ந்து பொதுமக்களிடம் கடலூர், சென்னை வெள்ள நிவாரண உதவிகள் திரட்டியதாகவும், அதை ஆட்சியரிடம் சேர்க்க வந்ததாகவும் தெரிவித்தனர். அவர்கள் அளித்த நிவாரணப் பொருட்களை ஆட்சியர் பெற்றுக் கொண்டார்.