

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே இருக்கும் மாநில நெடுஞ்சாலைத் துறையின் பலகைகளில் மீண்டும் பெரியார் ஈ.வெ.ரா சாலை என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர்.
சென்னையில் முத்துசாமி பாலத்தில் இருந்து மதுரவாயல் சந்திப்பு வரையிலான சாலை, `பூந்தமல்லி நெடுஞ்சாலை’ எனவும், `பெரியார் ஈ.வெ.ரா. சாலை’ எனவும் அழைக்கப்பட்டு வருகிறது. இதில் `ஈ.வெ.ரா. பெரியார் சாலை’ என்ற பெயர் எந்த முன்னறிவிப்பும் இன்றி, `கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு’ என்று பெயர் மாற்றப்பட்டு, சாலை நெடுகிலும் சில நாட்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத் துறை சார்பாக போர்டுகள் வைக்கப்பட்டன.
இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நெடுஞ்சாலைத் துறை வைத்த போர்டுகளில் கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்ற பெயரை பெரியார் திராவிடர் விடுதலை கழகத்தினர் கருப்பு மையை வைத்து அழித்தனர்.
இந்நிலையில், அந்த சாலையில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகளில் மீண்டும்`பெரியார் ஈ.வெ.ரா. சாலை’ என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நேற்று முன்தினம் இரவு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர்.
இது தொடர்பாக மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டனர்.