Published : 07 Jun 2014 10:13 AM
Last Updated : 07 Jun 2014 10:13 AM

குழந்தைத் திருமணம்: தடுத்து நிறுத்துமாறு எஸ்எம்எஸ் அனுப்பி உதவி கேட்ட சிறுமி

தனக்கு நடக்கவிருக்கும் திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு 17 வயது சிறுமி, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு எஸ்எம்எஸ் அனுப்பி யதன் பேரில் காவல் துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்தனர்.

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையின் செல்போன் எண்ணுக்கு வியாழக்கிழமை மாலையில் ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அதில், "17 வயதாகும் எனக்கு, எனது விருப்பம் இல்லாமல், பெற்றோர் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். என்னை காப்பாற்றுங்கள்" என்று கூறப்பட்டிருந்தது. அதில் அவரது முகவரியும் இருந்தது. அரும்பாக்கம் என்எஸ்கே நகரை சேர்ந்த ஸ்ருதி (17, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் இந்த எஸ்எம்எஸ் தகவலை அனுப்பியிருந்தார். கட்டுப்பாட்டு அறை காவலர்கள் உடனடியாக இந்த தகவலை அமைந்தகரை காவல் நிலைய ஆய்வாளர் ஆரோக்கிய ரவீந்திரனுக்கு தெரிவித்தனர்.

காவல் துறையினருடன் அந்த முகவரிக்கு சென்று விசாரணை நடத்தியதில், 17 வயதே ஆன ஸ்ருதிக்கு, திருவேற்காடு கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற இருந்தது தெரியவந்தது. உடனே ஸ்ருதியின் பெற்றோரை போலீஸார் அழைத்து கண்டித்து, அவர்களுக்கு அறிவுரை கூறினர். பின்னர் 21 வயது வரை ஸ்ருதிக்கு திருமணம் செய்து வைக்க மாட்டோம் என்று அவர்களிடம் எழுதியும் வாங்கப்பட்டது. சிறுமி ஸ்ருதியை மீட்டு செனாய் நகரில் உள்ள மத்திய அரசின் குழந்தைகள் நல மையத்தில் காவல் துறையினர் ஒப்படைத்தனர்.

ஸ்ருதியின் பள்ளிபடிப்பை அவரது பெற்றோர் 11-ம் வகுப்புடன் நிறுத்தி விட்டனர். தான் தொடர்ந்து படிக்க விரும்புவதாக ஸ்ருதி கூறியதை தொடர்ந்து அவரது படிப்புக்கு உதவி செய்வதாக குழந்தைகள் நல மைய பொறுப்பாளர் சில்வியா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x