ஆதிசேஷன் சிலை செய்வதற்காக வேலூர் வழியாக 230 டன் பாறையுடன் சென்ற ராட்சத லாரி

பெங்களூருவில் ஆதிசேஷன் சிலை வடிவமைக்க, வந்தவாசியில் இருந்து 230 டன் எடை கொண்ட பாறை, ராட்சத லாரியில் வேலூர் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் கொண்டு செல்லப்பட்டது. இதனால், சத்துவாச்சாரி பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. படம்:வி.எம்.மணிநாதன்
பெங்களூருவில் ஆதிசேஷன் சிலை வடிவமைக்க, வந்தவாசியில் இருந்து 230 டன் எடை கொண்ட பாறை, ராட்சத லாரியில் வேலூர் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் கொண்டு செல்லப்பட்டது. இதனால், சத்துவாச்சாரி பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. படம்:வி.எம்.மணிநாதன்
Updated on
1 min read

பெங்களூருவில் ஆதிசேஷன் சிலை செய்வதற்காக 230 டன் எடை கொண்ட பாறை ஏற்றிய ராட்சத லாரி வேலூர் வழியாக கடந்து சென்றது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு ஈஜிபுரா பகுதியில் கோதண்டராமசாமி கோயிலில் ஒரே கல்லாலான சுமார் 64 அடி உயரத்துடன் 11 முகங்கள், 22 கைகளுடன் கூடிய 108 அடி உயரத்தில் விஸ்வரூப கோதண்டராமர் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள பாறைகளில் இருந்து மத்திய, மாநில அரசுகளின் அனுமதியுடன் பாறை வெட்டி எடுக்கப்பட்டது.

கோதண்டராமசாமி சிலை செய்ய சுமார் 64 அடி நீளம் 26 அடி அகலம், 7 அடி தடிமனுடன் சுமார் 380 டன் எடையுள்ள பாறையும், ஆதிசேஷன் சிலை செய்வதற்காக சுமார் 24 அடி நீளம், 30 அடி அகலம், 12 அடி தடிமன் கொண்ட சுமார் 230 டன் எடையுள்ள பாறை நவீன இயந்திரங்கள் மூலம் கடந்த 2017-ம் ஆண்டு வெட்டி எடுக்கப் பட்டது. இதில், கோதண்டராம சுவாமி சிலை செய்வதற்கான 380 டன் எடையுள்ள ஒரே பாறை கடந்த 2018-ம் ஆண்டு 240 டயர்கள் பொருத்தப்பட்ட ராட்சத லாரி மூலம் பெங்களூரு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், தற்போது ஆதிசேஷன் சிலை செய்வதற்கான 230 டன் எடையுள்ள பாறை 128 டயர்கள் பொருத்தப்பட்ட ராட்சத லாரியில் ஏற்றப்பட்டு இரு தினங்களுக்கு முன்பு புறப்பட்டது. இந்த ராட்சத லாரி தெள்ளார், வந்தவாசி, செய்யாறு, ஆற்காடு வழியாக சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை அடைந்தது. இந்த லாரி நேற்று காலை 8 மணியளவில் வேலூர் சத்துவாச்சாரியை கடந்தது.

சத்துவாச்சாரி நெடுஞ்சாலை பகுதியில் சுரங்கப்பாதை பணி நடைபெறுவதால் ராட்சத லாரி செல்ல நீண்ட நேரமானது. ராட்சத பாறை ஏற்றிய லாரி சென்றபோது பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர். இதனால், சத்துவாச்சாரி பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரு தினங்களில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் லாரி செல்வதால் ஓரிரு நாளில் 230 டன் எடை கொண்ட பாறை திட்டமிட்டபடி பெங்களூரு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in