

திருவள்ளூர் மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழையால் வேலை வாய்ப்பினை இழந்துள்ளோருக்கு தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில், 526 கிராம ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், தொடர்ந்து பணிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் 3,01,147 குடும்பங்களுக்கு வேலை அடையாள அட்டை வழங்கப்பட்டதில், 2015-16ம் நிதியாண்டில் இதுவரை 2,16,328 குடும்பங்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, நவம்பர் மற்றும் டிசம்பர் 2-ம் வாரம் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் பலருக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி வழங்கப்பட்டுள்ளது.
கனமழையால் விவசாயம், கட்டுமானம் மற்றும் இதர தொழில்களில் வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள், தனிநபர் இல்ல கழிப்பிடங்கள், இந்திரா நினைவு குடியிருப்பு மற்றும் பசுமை வீடுகள் கட்டுதல், கிராம ஊராட்சி, வட்டார ஊராட்சி சேவை மைய கட்டிடங்கள் போன்ற கட்டுமான பணிகள் மற்றும் சாலை சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு பயனடையலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.