

உலகில் மற்ற விலங்குகளுடன் பழகுவது போல் மீன்களுடனும் பழக முடியும் என்று தெரிவித்துள்ள புதுச்சேரி ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த், இதுதொடர்பான வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்.
சென்னை மற்றும் புதுச்சேரியில் ஆழ்கடல் பயிற்சி மையத்தை நடத்தி வருபவர் அரவிந்த். அவர் இன்று ஆழ்கடலில் மீன்களுடன் பழகுவது போன்று வீடியோ வெளியிட்டிருந்தார்.
இதுபற்றி 'இந்து தமிழ் திசை' இணையதளத்திடம் பேசிய அவர், புலி, சிங்கம், பறவைகளோடும், வீட்டு விலங்குகளோடும் நெருக்கமாக இருப்பதுபோல் மீன்களுடனும் நெருக்கமாக இருக்க முடியும். அதற்கு நேரம் செலவிட வேண்டும். பல மாதங்கள் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். ஒரே நாளில் அவற்றுடன் நண்பராகி விட முடியாது. 2010-ல் ஆழ்கடலில் பழக்கமாகி, தற்போதும் அடையாளம் காணும் மீன்களும் உண்டு. முக்கியமாகக் கணவாய் மீன்கள் அதுபோல் பழக்கமாகி விட்டன.
ஆழ்கடல் பயிற்சியின்போது அங்குள்ள மீன்களுடன் அடிக்கடி பழகுவோம். அதனால், மற்ற மீன்களைப் போல தங்களைப் பார்த்தவுடன், வேறு சில மீன்களும் என்னிடம் வந்து பழக தொடங்கியுள்ளன. சில சமயம் அவற்றின் வாயில் தூண்டில் பாகம், வலை ஆகியவை மாட்டியிருக்கும். அதை எடுத்து விட நம்மிடம் வந்து உதவி கேட்கும்.
குழுவாக இருந்தாலும் மீன்கள் நம்மை எளிதாக அடையாளம் காணும். அதே நேரத்தில் மற்றவர்களை அவை நெருங்க விடாது" என்று அரவிந்த் தெரிவித்தார்.
இதேபோல் ஆழ்கடலில் மீன்களைத் தொடும்போது அவை அமைதியாக இருப்பது, மீன்கள் வாயில் மாட்டியிருக்கும் வலையை எடுத்து விடுவது போன்ற வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்.