Last Updated : 16 Apr, 2021 06:21 PM

 

Published : 16 Apr 2021 06:21 PM
Last Updated : 16 Apr 2021 06:21 PM

வனப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு: ஊருக்குள் நுழைந்த 2 காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சம்; யானைகள் தாக்கி 2 கால்நடைகள் காயம்

கோவை சிறுமுகை வனப்பகுதிக்கு உட்பட்ட பெத்திக்குட்டை காட்டுப் பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் இன்று ஊருக்குள் நுழைந்தன. வனத்துறையினர், பொதுமக்கள் இணைந்து பட்டாசு வெடித்து யானையை அங்கிருந்து விரட்டினர்.

கோவை சிறுமுகை வனப்பகுதியில் யானை, சிறுத்தை, காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கோடை காலத்தை ஒட்டி, வனப்பகுதியில் வறட்சியான சூழல் நிலவி வருகிறது. வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் போதிய அளவுக்கு நீர் வசதி இல்லை. நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. தேவையான உணவும் வன விலங்குகளுக்குச் சரிவர கிடைப்பதில்லை. இதனால் வனத்தில் உள்ள விலங்குகள், குடிநீர், உணவு தேடி வன எல்லையை விட்டு, அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் நுழையும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன.

இந்நிலையில், உணவு மற்றும் குடிநீர் தேடி, சிறுமுகை அருகேயுள்ள பெத்திக்குட்டை வனப் பகுதியில் இருந்து நேற்று இரவு 6 காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறின. விடிய விடிய உணவு மற்றும் குடிநீர் தேடிய யானைகள், இன்று (16-ம் தேதி) காலை மீண்டும் வனப் பகுதியை நோக்கித் திரும்பின. அதில் 2 யானைகள் மட்டும் வழிதவறி, அன்னூர் அருகேயுள்ள சாலையூர் என்ற ஊருக்குள் இன்று காலை நுழைந்தன. யானைகள் ஊருக்குள் வருவதைக் கண்ட, அப்பகுதி மக்கள் அச்சமடைந்து, வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் இணைந்து, ஊருக்குள் வந்த காட்டு யானைகளைப் பட்டாசு வெடித்தும், வாத்தியங்களை அடித்தும் வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். இதனால் ஆவேசமடைந்த யானைகள், அங்கு பொதுமக்களை அச்சுறுத்தியபடி சிறிது நேரம் உலாவி விட்டு, அருகேயுள்ள கோபி ராசிபுரத்துக்கு வந்தன.

பசுக்கள் மீது தாக்குதல்

யானையைப் பின்தொடர்ந்து வந்த பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் தொடர்ந்து, யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் மிரண்ட யானைகள் அங்கிருந்த சோளக்காட்டில் நுழைந்து ஓட்டம் பிடித்தன. அப்போது வழியில் உள்ள ஒரு இடத்தில் கட்டப்பட்டிருந்த பசு மாட்டின் வயிற்றைத் தந்தத்தால் குத்தி யானை கிழித்தது. இதில் பசுமாட்டின் வயிறு கிழிந்து குடல் வெளியே வந்தது. பின்னர், பொம்மனாம்பாளையத்தில் இருந்த மற்றொரு பசுமாட்டையும் யானை தாக்கியது. யானைகளின் தாக்குதலில் காயமடைந்த பசுமாடுகளை பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் மீட்டு கால்நடைத்துறையின் மூலம் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து வனத்துறையினர் ஆஞ்சநேயர் கோயில் கரடு பகுதியில் இருந்து பெத்திக்குட்டை வனப்பகுதிக்கு யானைகளை விரட்டும் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டனர். ஒரு கட்டத்தில் இரண்டு யானைகளும் பிரிந்து ஆளுக்கு ஒரு திசையில் சென்றன. இருப்பினும், தொடர்ந்து வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சியால் யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டன.

வனத்துறையினருக்கு கோரிக்கை

இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘வனப்பகுதியில் நிலவும் கடுமையான வறட்சியின் காரணமாக, வேறு வழியின்றி யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்புக்குள் நுழைகின்றன.

வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் நீர் இருப்பதை வனத்துறையினர் உறுதி செய்ய வேண்டும். வனப்பகுதியில் வன விலங்குகளுக்குத் தட்டுப்பாடு இன்றி, உணவு கிடைப்பதை வனத்துறையினர் உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் வன விலங்குகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்கலாம்,’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x