

சினிமா ஷூட்டிங், தியேட்டர்கள், டாஸ்மாக் பார்கள் ஆகிய இடங்களில் பரவாத கரோனா, கோயில் திருவிழாக்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதால் மட்டும் பரவி விடுமா? என்று தமிழ்நாடு நாடக- நாட்டுப்புறக் கலைஞர்கள் நலச் சங்கத்தினர் வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கரோனா கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கு அரசு உடனே உதவ வலியுறுத்தியும் தமிழ்நாடு நாடக- நாட்டுப்புறக் கலைஞர்கள் நலச் சங்கத்தினர் 30க்கும் அதிகமானோர் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினியிடம் மனு அளித்தனர். மனு அளிக்க வந்தவர்களில் சிலர், இந்துக் கடவுள்களின் வேடங்களில் வந்திருந்தனர்.
முன்னதாக, ஆட்சியர் அலுவலகம் அருகே திரண்டிருந்த அவர்கள் கூறும்போது, திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக 3,000 பேரும், பதிவு செய்யாமல் 12,000க்கும் அதிகமானோரும் உள்ளனர். கோயில் திருவிழா, திருமணக் கலை நிகழ்ச்சிகளை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தி வருகிறோம்.
கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் தொழில் இன்றி, கடன் வாங்கி, கடும் போராட்டத்துக்கு இடையே வாழ்க்கை நடத்தினோம். இதனிடையே, கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, தற்போதுதான் மெல்ல மெல்ல எழுந்து நிற்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், கரோனா பரவல் காரணமாகத் தற்போது மீண்டும் கலை நிகழ்ச்சிகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த ஆண்டு வாங்கிய கடனைக் கூட அடைக்க முடியாமலும், வாழ்க்கையை நடத்த முடியாமலும் பல்வேறு வழிகளில் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளோம்.
சினிமா ஷூட்டிங், சினிமா தியேட்டர்கள், டாஸ்மாக் பார்கள், உணவகங்கள் எனப் பல்வேறு தொழில்கள் கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கெல்லாம் பரவாத கரோனா, கலை நிகழ்ச்சிகள் நடத்துவதால் மட்டும் பரவிவிடுமா? எனவே, கோயில் திருவிழாக்களில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை என நேரக் கட்டுப்பாடுடன் கலை நிகழ்ச்சிகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
இல்லையெனில், கட்டுப்பாடுகள் அகற்றப்படும் வரை பதிவு பெற்ற, பதிவு செய்யாத நாடக மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 வீதம் அரசு நிதியுதவி அளிக்க வேண்டும். இல்லையெனில், இறப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்" என்று நாட்டுப்புறக் கலைஞர்கள் தெரிவித்தனர்.