தூத்துக்குடியில் கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகப் புகார்: போதுமான மருந்துகளை வழங்க அரசுக்கு கோரிக்கை

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பலர் தடுப்பூசி போடாமல் திரும்பி செல்வதால் இன்று தடுப்பூசி போடும் இடத்தில் கூட்டம் மிகக் குறைவாக இருந்தது. படம்: என்.ராஜேஷ்
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பலர் தடுப்பூசி போடாமல் திரும்பி செல்வதால் இன்று தடுப்பூசி போடும் இடத்தில் கூட்டம் மிகக் குறைவாக இருந்தது. படம்: என்.ராஜேஷ்
Updated on
2 min read

தூத்துக்குடியில் கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால், அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வகையில் தேவையான தடுப்பூசி மருந்துகளை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரோனா தடுப்பூசி:

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

முதல் கட்டமாக முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், அரசு அலுவலர்கள், காவல் துறையினர், பத்திரிக்கையாளர்களுக்கும், தொடர்ந்து மார்ச் 1-ம் தேதி முதல் 2-வது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் அனைவருக்கும், 45 வயதுக்கு மேல் 59 வயதுக்குள் இருக்கும் இணை நோய்கள் கொண்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. அடுத்தக்கட்டமாக ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

முதலில் தடுப்பூசி போடுவதற்கு பெரும்பாலானவர்கள் முன்வரவில்லை. பலரும் தயக்கம் காட்டினர். இதனால் கரோனா தடுப்பூசி மையங்களில் கூட்டம் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்றின் 2-ம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அனைவரும் தடுப்பூசி போடுவது ஒன்றே தீர்வாக அமையும் என மத்திய, மாநில அரசுகள் கூறியுள்ளன. மேலும், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக மக்கள் மத்தியில் கரோனா தடுப்பூசி போடும் எண்ணம் அதிகரித்துள்ளது. பலரும் கரோனா தடுப்பூசி மையங்களை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் கரோனா தடுப்பூசி மையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரமாத தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கோவாக்சின் தட்டுப்பாடு:

இந்த சூழ்நிலையில் தூத்துக்குடியில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் போடப்படுகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட மற்ற இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டும் போடப்படுகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2 நாட்களாக கோவாக்சின் தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் புதிதாக தடுப்பூசி போட வருவோர் அனைவருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே போடப்படுகிறது. அதேநேரத்தில் 2-வது டோஸ் கோவாக்சின் தடுப்பூசி போட வருபவர்களுக்கு மட்டும் கோவாக்சின் தடுப்பூசி போடப்படுவதாக கூறப்படுகிறது.

ஆனால், பெரும்பாலானவர்கள் தங்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி தான் போட வேண்டும் என கூறுவதால், அவர்களுக்கு தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் தடுப்பூசியே போடாமல் திரும்பி சென்றுவிடுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இன்று தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசி மருந்து தட்டுப்பாட்டை போக்க அரசு உடனடியாக தலையிட்டு தேவையான கோவாக்சின் தடுப்பூசியை தூத்துக்குடிக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசியை ஆர்வமுடன் பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளில் போட்டு வருகின்றனர். இந்நிலையில் முதல்தவனையாக கோவாக்சின் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் இந்த தடுப்பூசியை போட முடியாமல் திரும்பிச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வருக்கு கடிதம்:

மேலும் இது தொடர்பாக எம்பவர் இந்தியா அமைப்பினர் செயல் இயக்குநர் ஆ.சங்கர் தமிழக முதல்வருக்கு அவசர கடிதம் எழுதியுள்ளார். அதன் விபரம்: தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் மிகவும் ஆர்வமுடன் அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசியை போட்டு வருகின்றனர். ஏப்ரல் 25-ம் தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என தமிக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதனால் அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசியை போட வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசியை போதிய அளவில் இருப்பு வைக்க உத்திரவிட வேண்டும்.

மேலும் இருதய நோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற துணை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 45 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் பணம் செலுத்தி தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுவதற்கு உரிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட ஆவன செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in