Published : 16 Apr 2021 04:47 PM
Last Updated : 16 Apr 2021 04:47 PM

மெரினாவில் 900 தள்ளுவண்டிக் கடைகள்; மாற்றுத்திறனாளிகளுக்கு 5% வழங்கக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

சென்னை மெரினா கடற்கரையில் ஒதுக்கப்படும் 900 தள்ளுவண்டிக் கடைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் ஒதுக்கக் கோரிய மனுவிற்கு தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் 47 கோடி ரூபாய் செலவில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக உரிமம் பெற்ற வியாபாரிகளுக்கு 900 தள்ளுவண்டிக் கடைகள் வழங்கும் சிறப்பு திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.

நீதிமன்ற மேற்பார்வையில் 900 தள்ளுவண்டிக் கடைகளைப் பயனாளிகளுக்கு வழங்குவது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் குலுக்கலும் நடைபெற்றது. இந்நிலையில், 900 தள்ளுவண்டிக் கடைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய ஒதுக்கீடு வழங்கக் கோரி தமிழ்நாடு மாற்றுத்திறனாளி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மாநகராட்சியை அணுகியபோது, இதுபோன்று எந்தவொரு ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி, 900 தள்ளுவண்டிக் கடைகளில் 5 சதவீதத்தை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு மாற்றுத்திறனாளி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், “மத்திய அரசின் சிறப்பு திட்டம் மற்றும் வளர்ச்சி திட்டங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் வழங்க வேண்டுமென மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் 900 தள்ளுவண்டிக் கடைகளில் 5 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, மனு தொடர்பாக 2 வாரங்களுக்குள் தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவிட்டு, தள்ளுவண்டிக் கடைகள் அமைப்பது தொடர்பான வழக்கோடு இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x