

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவுக்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிவகங்கையைச் சேர்ந்த வழக்கறிஞர் மணிகண்டன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏப். 15 முதல் 30-ம் தேதி வரை சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவுக்கு கரோனா பரவலைக் காரணம் காட்டி பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
எனவே, சித்திரை திருவிழாவை ஒட்டி நடைபெறும் சாமி வீதி உலாவை சித்திரை வீதிகளில் நடத்தவும், மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்துக்கு கட்டுப்பாடுகளுடன் பக்தர்களை அனுமதிக்கவும், பக்தர்கள் இல்லாமல் ஒரு நாள் மட்டும் வைகையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை நடத்தவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், கரோனா 2ம் அலை பரவி வரும் சூழலில் மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியே சித்திரை விழாவில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
விழா முடிந்ததும் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்றார்.
மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், திருக்கல்யாணத்துக்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும். சித்திரை வீதிகளில் சாமி வீதி உலா சென்றால் பக்தர்கள் தரிசனம் செய்வர் என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் அனைத்து விழாக்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் மட்டுமே பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
கரோனா 2-ம் அலை பரவி வரும் சூழலில் பக்தர்களை அனுமதித்தால் அவர்களைப் பாதுகாப்பது எப்படி? இதைக் கருத்தில் கொண்டே கோயில் நிர்வாகமும், கரோனா தடுப்பு வல்லுனர்களும் வழிமுறைகளைக் வகுத்துள்ளனர். இதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை.
கரோனா 2-ம் அலை பரவிய சூழலில் பொதுநலன் கருதியே கோவில் திருவிழாக்களுக்கு அரசு கட்டுப்பாடு விதிக்கிறது. எனவே, சித்திரை திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட முடியாது. அதே நேரத்தில் சித்திரைத் திருவிழாவிற்கு யாருக்கும் சிறப்பு பாஸ், விஐபி பாஸ் கொடுக்க வேண்டாம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.