Published : 16 Apr 2021 04:31 PM
Last Updated : 16 Apr 2021 04:31 PM

'தலைவி', 'ஜெயா', 'குயின்' படங்களுக்குத் தடை கோரி ஜெ.தீபா மேல் முறையீடு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

சென்னை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள 'தலைவி', 'ஜெயா', 'குயின்' படங்களுக்குத் தடை விதிக்கக் கோரிய ஜெ.தீபாவின் மேல் முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் தமிழில் 'தலைவி' என்ற பெயரில் இயக்குநர் ஏ.எல்.விஜய், இந்தியில் 'ஜெயா' என்ற பெயரில் ஹைதராபாத்தைச் சேர்ந்த விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோர் திரைப்படமாக எடுத்து வருகின்றனர்.

இதேபோல, ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் 'குயின்' என்கிற இணையதளத் தொடரை இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் எடுத்து, முதல் பகுதியை வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களுக்கும், இணையதளத் தொடருக்கும் தடை விதிக்கக் கோரி ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெ.தீபா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, 'தலைவி', 'ஜெயா', 'குயின்' படங்களை வெளியிடத் தடை விதிக்க மறுத்து, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், படம் முழுக்க முழுக்கக் கற்பனையானது எனப் படத்திற்கு முன்பாக கார்ட் வெளியிட உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஜெ.தீபா தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, நீதிபதிகள் சுப்பையா, சத்திகுமார் சுகுமார் குரூப் ஆகியோர் அமர்வில் விசாரணையில் இருந்தது.

தீபா தரப்பில், “படங்களில் தங்களுடைய குடும்பத்தினர் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். படத்தை வெளியிடுவதற்கு முன்பாக தனக்குப் போட்டுக்காட்டி ஒப்புதல் பெற உத்தரவிட வேண்டும்” என வாதிடப்பட்டது.

'தலைவி' பட இயக்குநர் ஏ.எல்.விஜய் தரப்பில், “ 'தலைவி' என்ற புத்தகத்தின் அடிப்படையிலேயே இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. தீபாவிடம் ஒப்புதல் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், பொதுத் தளங்களில் வெளியான தகவலின் அடிப்படையிலேயே இந்தக் கதை எடுக்கப்பட்டுள்ளது. ஜெயலிதாவை நல்ல முறையிலேயே சித்தரித்துள்ளோம். எதிர்காலச் சந்ததியினர் அவரைப் பற்றித் தெரிந்துகொள்ளும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது” என விளக்கம் அளிக்கப்பட்டது.

கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பில், “படத்தை சென்சார் போர்டு பார்த்து தணிக்கை செய்யும். இந்தப் படத்துக்குத் தடை கேட்க தீபாவுக்கு எந்த ஒரு உரிமையும் கிடையாது” என்று தெரிவிக்கப்பட்டது.

வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்திருந்த நிலையில், 'தலைவி', 'குயின்', 'ஜெயா' படங்களை வெளியிடத் தடை விதிக்க முடியாது எனக் கூறி தீபாவின் மனுவைத் தள்ளுபடி செய்தும், தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்தும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x