

கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் பக்தர்களுக்கு இன்று முதல் மே 15 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது கரோனா தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் காரணமாக, இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்து புராதானச் சின்னங்கள், இடங்கள், அருங்காட்சியகம் ஆகியவை வரும் மே மாதம் 15-ம் தேதி வரை மூடப்படுவதாக, மத்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
கங்கை ஆறுவரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றதன் நினைவாக, கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரத்தை முதலாம் ராஜேந்திர சோழன் அமைத்து அங்கு பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டினார். இந்தக் கோயிலை ஐக்கிய நாடுகள் அமைப்பு உலக பாரம்பரியச் சின்னமாக அறிவித்து பாதுகாத்து வருகிறது. இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.
கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக இந்தக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று (ஏப்.16) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. என்றாலும், கோயிலுக்குள் வழக்கமான பூஜைகள் நடைபெறும் எனக் கோயில் அலுவலர்கள் தெரிவித்தனர்.
தமிழகம், இந்தியா மட்டுமன்றி, உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் இக்கோயிலைக் காண வந்து செல்வர். இந்நிலையில், ஒரு மாத காலம் இந்தக் கோயில் மூடப்படுவது, சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.