Published : 16 Apr 2021 03:11 AM
Last Updated : 16 Apr 2021 03:11 AM

தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பத்தை சமாளிக்க பசுமை திட்டத்தை செயல்படுத்துவது அவசியம்: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை

தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பத்தை சமாளிக்க, மரங்களை அதிகம் நட்டு வளர்க்க வேண்டும். பசுமை செயல் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

சித்திரை பிறந்துவிட்ட நிலையில், தமிழகத்தில் பரவலாக வெப்பநிலை 110 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்துவிட்டது. இந்த நிலையில், வெப்பத்தின் கடுமையில் இருந்து மக்களை காக்க, பசுமை செயல் திட்டத்தை செயல்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

வெயிலின் தாக்கத்தால் தமிழகம் 2 வழிகளில் பாதிக்கப்படுகிறது. முதலாவதாக, காலநிலை மாற்றத்தால் பூமியின் சராசரி வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியல் அதிகரித்துள்ளது. இது 1.5 டிகிரி என்ற அளவுக்கு உயரும். அதனால், வெயிலின் கொடுமை அதிகரிக்கும். இரண்டாவதாக, வெப்பநிலை அதிகம் இருந்தாலும்கூட, மரங்களின் எண்ணிக்கை, பசுமைப் போர்வையின் பரப்பு அதிகமாக இருந்தால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறையும்.

ஆனால், ஒப்பீட்டளவில் சில மாவட்டங்களில் மரங்கள், பசுமைப் பரப்பு மிக குறைவாக இருப்பதால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.

வரும் ஆண்டுகளில் புவி வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே செல்லும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர். அதனால், கோடைகாலத்தில் திறந்தவெளியில் வேலை செய்ய முடியாத சூழல் ஏற்படும்.

இந்தியாவில் 75 சதவீத தொழிலாளர்கள் வெப்பத்தால் பாதிக்கப்படும் சூழலில் பணியாற்றுவதால், உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவீதம் வரை, அதாவது ரூ.1.80 லட்சம் கோடி இழப்பு ஏற்படக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடும் வெப்பத்தால் உயிரிழப்பும் அதிகரிக்கக்கூடும்.

மரங்களை அதிகம் நட்டு வளர்ப்பதன் மூலம் கோடைகால வெப்பநிலையில் 2 முதல் 8 டிகிரிசெல்சியஸ் வரை குறைக்க முடியும். மேலும், கட்டிடங்களுக்குள் தேவைப்படும் குளிர்சாதனத் தேவையில் 30 சதவீதத்தை குறைக்க முடியும்.

எனவே, அதிகரிக்கும் வெப்பத்தை சமாளிக்க, நகரங்களில் பெருமளவு மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். சுற்றியுள்ள பகுதிகளிலும் காடுகள், பசுமைப் பகுதிகளை பாதுகாத்து மேம்படுத்த வேண்டும். ஒவ்வொரு நகருக்கும் ஒரு பசுமை செயல் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள பசுமைப் பகுதிகள், சதுப்பு நிலங்களை இனி அழிக்க மாட்டோம் என்று அரசு உறுதியேற்க வேண்டும். நகரப் பகுதிகளில் உள்ளமரங்கள் வெட்டி வீழ்த்தப்படுவதை தடுக்கவும், அவற்றைபாதுகாத்து பசுமைப் போர்வையை விரிவுபடுத்தவும் மரங்கள் ஆணையத்தை உரிய அதிகாரங்களுடன் உருவாக்க வேண்டும்.

அரசும், மக்களும், சமூக அமைப்புகளும் போட்டிபோட்டு மரங்களை வளர்ப்போம். இந்த 10 ஆண்டில் இல்லாவிட்டாலும், அடுத்த 10 ஆண்டிலாவது இதமான வெப்பநிலையில் வாழும் சூழலை ஏற்படுத்துவதற்கான பசுமை நடவடிக்கைகளை இந்தநிமிடத்தில் இருந்து நாம் அனைவரும் தொடங்குவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x