தமிழகத்தில் தேவையான உரம் இருப்பு உள்ளது: வேளாண் துறை அதிகாரிகள் தகவல்

தமிழகத்தில் தேவையான உரம் இருப்பு உள்ளது: வேளாண் துறை அதிகாரிகள் தகவல்
Updated on
1 min read

தமிழகத்தில் உரத் தட்டுப்பாடு இல்லை. மாவட்டம்தோறும் தேவையான அளவு உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் நடப்பு கரீப் பருவ சாகுபடிக்கு தேவையான ரசாயன உரங்கள் மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் மாதத்தின் உரத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இம்மாதத்துக்கான உர வழங்கல் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, உர நிறுவனங்கள் ஏப்ரல் மாதத்துக்கான உரத்தை வழங்கி வருகின்றன.

தற்போது தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் யூரியா 1.52 லட்சம் மெட்ரிக் டன், டிஏபி உரம் 31,800 மெட்ரிக் டன், மியூரேட் ஆப் பொட்டாஷ் 74,980 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் 1.50 லட்சம் மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் மாத உரத் தேவைக்கு அதிகமாகவே ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

எனவே, விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் அல்லது தனியார் உர விற்பனை நிலையங்களில் தேவையான அளவு உரங்களை வாங்கிக் கொள்ளலாம். மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர் மற்றும் வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தில் பணிபுரியும் வேளாண்மை உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) ஆகியோர் மாவட்டத்தின் உரத்தேவை மற்றும் தரத்தை கண்காணித்து வருகின்றனர்.

உரம் தொடர்பான புகார் இருந்தால், வேளாண்மை உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) அல்லது வேளாண்மை இணை இயக்குநரிடம் தெரிவிக்கலாம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in