

கோவையில் பெய்த கனமழை காரணமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட உக்கடம் பெரிய குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் குளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் உக்கடம் பெரிய குளத்தில் குய்க்வின் பகுதியில் 1.2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.39.74 கோடி மதிப்பீட்டிலும், பேஸ் -1 பகுதியில் 4.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.62 கோடி மதிப்பீட்டிலும் குளத்தினை புனரமைத்து, சீரமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துஉள்ளன.
இதில், உக்கடம் பெரிய குளத்தைச் சுற்றிலும் உள்ள கரைகளைப் பலப்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டு, கரையில் பூங்காக்கள், மிதிவண்டி பாதை, மிதக்கும் நடைபாதை, குளத்தில் ஆகாயத்தாமரை அப்புறப்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி மாத இறுதியில் மக்கள் பயன்பாட்டுக்கு குளம் திறக்கப்பட்டது.
கரும்புக்கடை சேரன்நகர் பகுதியில் உக்கடம் பெரிய குளத்தின் கரையை ஒட்டி சுமார் 12 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. கோவையில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை கனமழை பெய்தது. நேற்று அதிகாலை 3 மணியளவில் மழைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் சுற்றுச்சுவர் சுமார் 50 அடி தூரத்துக்கு இடிந்து விழுந்தது. குடியிருப்புகள் இல்லாத பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. தகவலறிந்து சம்பவ பகுதிக்கு நேற்று காலை சென்ற மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.