கோவையில் நேற்று முன்தினம் இரவில் பெய்த கனமழை: மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு

கோவை கிக்கானி பள்ளி அருகேயுள்ள ரயில்வே பாலத்தின் கீழ் தேங்கியுள்ள மழைநீரை கடந்து வரும் வாகன ஓட்டுநர். (அடுத்த படம்) ஆழியாறு பகுதியில் பெய்த கனமழையால் குரங்கு அருவியில் கொட்டும் தண்ணீர்.
கோவை கிக்கானி பள்ளி அருகேயுள்ள ரயில்வே பாலத்தின் கீழ் தேங்கியுள்ள மழைநீரை கடந்து வரும் வாகன ஓட்டுநர். (அடுத்த படம்) ஆழியாறு பகுதியில் பெய்த கனமழையால் குரங்கு அருவியில் கொட்டும் தண்ணீர்.
Updated on
2 min read

கோவையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ரயில்வே பாலங்களின் கீழ் பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில், கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடும் வெயில் நிலவியது. இதை தணிக்கும் வகையில், நேற்று முன்தினம் மதியம் மாநகரின் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. அதைத் தொடர்ந்து, மாலை நேரத்தில் சற்று மிதமான மழை பெய்தது.

இந்நிலையில் இரவு 8.30 மணி முதல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்யத் தொடங்கியது. சில மணி நேரம் பெய்த பின்னர் மழை நின்றது. அதன் பின்னர்நள்ளிரவு நேரத்தில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.

இதனால், மாவட்டத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக, அவிநாசி சாலை உப்பிலிபாளையம் அண்ணாமேம்பாலத்தின் கீழ் பகுதி, பெரியகடை வீதி, லங்கா கார்னர் ரயில்வே பாலத்தின் கீழ் பகுதி, வடகோவை மேம்பாலத்தின் கீழ் பகுதி, காட்டூர் காளீஸ்வரா மில் சாலையிலுள்ள பாலத்தின் கீழ் பகுதி, கிக்கானி பள்ளி அருகேயுள்ள ரயில்வே பாலத்தின் கீழ் பகுதி உள்ளிட்ட இடங்களில் மழை நீர் தேங்கியது.

பாலங்களின் கீழ்புற இடங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர் விரைவாக வடியாததால், நேற்று காலை நடந்து சென்ற பொதுமக்கள், வாகனங்களில் சென்றவர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். அதேபோல, உக்கடம் பெரியகுளம் அருகே, ஸ்மார்ட்சிட்டி திட்டப் பணிக்காக கட்டப்பட்டிருந்த சுவரும் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சரிந்து விழுந்தது.

கோவை மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி மழையளவு (மி.மீ.) வருமாறு: அன்னூர் 23 மி.மீ.,சின்கோனா 40, சின்னக்கல்லார் 33, வால்பாறை பிஏபி 26, வால்பாறை தாலுகா 25, சோலையாறு 5, ஆழியாறு 67.6, சூலூர் 39, பொள்ளாச்சி 20, கோவை தெற்கு தாலுக்கா 18, விமான நிலையம் 15.4, பெரியநாயக்கன்பாளையம் 2, வேளாண்மைப் பல்கலைக்கழகம் 3 மில்லி மீட்டர்.

குரங்கு அருவியில் நீர்வரத்து

வால்பாறை, ஆழியாறு பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த கன மழையால் தலநார், சக்தி எஸ்டேட் பகுதிகளில் உள்ள ஓடைகளில் பெருக்கெடுத்த மழைநீர், சோத்துப்பாறை சிற்றாற்றில் கலந்தது. இந்த நீரால் ஆழியாறு அடுத்த வில்லோனி வனப்பகுதியில் உள்ள குரங்கு அருவியில் 80 அடி உயரத்திலிருந்து தண்ணீர் கொட்டத் தொடங்கியுள்ளது.

கோடை வெயில் காரணமாக கடந்த சில மாதங்களாக நீர்வரத்து இன்றி வறண்டு கிடந்த ஆழியாறு குரங்கு அருவியில் தற்போது நீர்வரத்து தொடங்கியுள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in