

நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையால், உதகையில் வெப்பம் தணிந்து ‘குளு குளு’ காலநிலை நிலவுகிறது. கோடை மழைதொடங்கியுள்ளதால் சுற்றுலாபயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 8மாதங்களாக மழை பெய்யாததால் தண்ணீ்ர் பற்றாக்குறை மேலோங்கியது. மேலும், மழையின்மையால் விவசாயிகள் விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் மழைக்காக காத்திருந்தனர். மழை பெய்யாததால் சமவெளிப்பகுதிகளில் இம்முறை வெயிலின் தாக்கம் முன்னதாகவே தொடங்கியது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகவெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வருவது அதிகரித்துள்ளது. உதகையில் கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால், கடந்த சில தினங்களாககாலநிலையில் மாற்றம் ஏற்பட்டது.
100 டிகிரி வெயிலைப் பார்த்த சமவெளிப் பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இந்த காலநிலை குளிர்ச்சியாகவே இருந்தது. கடந்த மூன்று நாட்களாக பகல் நேரங்களில் மேக மூட்டமாக இருந்தது. அவ்வப்போது சில நிமிடங்கள் மழை பெய்தது.இந்நிலையில், நேற்று காலை முதல் 1 மணி நேரம் நீலகிரி மாவட்டம் உதகை, கோத்தகிரி பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இதனால், வெப்பம் அதிகமாக காணப்படும் கூடலூர், பந்தலூர், குன்னூர், மஞ்சூர் மற்றும் கோத்தகிரி போன்ற பகுதிகளில் வெப்பம் ஓரளவு குறைந்துள்ளது. மழையால் குளு குளு காலநிலை நிலவுகிறது. இதனால், உதகை வந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் சுற்றுலா தலங்களில் வலம் வருகின்றனர்.