

தமிழக அரசின் கட்டுப்பாடுகளைமீறி ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களில் அதிகளவில் பயணிகளை ஏற்றி செல்வதால், கரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா நோய் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கரோனா பரவலை தடுக்க வாடகை டாக்சி வாகனங்களில் ஓட்டுநர் தவிர 3 பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும். ஆட்டோக்களில் 2 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பெரும்பாலான வாடகை வாகனங்கள், ஷேர் ஆட்டோக்கள், ஆட்டோக்களில் இந்த விதிமுறையை பின்பற்றுவதில்லை. குறிப்பாக சென்னையை தவிர புறநகர் பகுதிகள், மாவட்ட பகுதிகளில் ஒரே ஆட்டோவில் 5 பேர் வரையிலும், ஷேர் ஆட்டோக்களில் 7 பேர் வரையிலும் ஏற்றிச் செல்கின்றனர். இதனால், கரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மற்றும் இதர மாவட்ட, நகர பகுதிகளில் இருக்கும் ஷேர் ஆட்டோக்களில் ஒரே நேரத்தில் 8 பேரை ஏற்றிச் செல்கின்றனர். கரோனா தொற்று வேகமாக பரவி வரும் இந்த சூழலிலும், கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பது கவலையை ஏற்படுத்தி வருகிறது.
இதுதொடர்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் கூறும்போது, ‘‘கரோனா பாதிப்பால் மக்கள் வெளியூர் பயணத்தை தவிர்த்து வருகின்றனர். போதிய அளவில் வருமானம் இல்லாததால், வேறு தொழிலுக்கும், அன்றாட வேலைக்கும் செல்கின்றனர். சில இடங்களில் மக்கள் ஒரே நேரத்தில் வரும் போது சிலர் ஆட்டோக்களில் 4 பேரை ஏற்றி செல்கின்றனர். அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை பெரும்பாலான ஆட்டோ தொழிலாளர்கள் பின்பற்றி வருகின்றனர். ஆட்டோதொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில் ஆட்டோ பர்மிட் வைத்து ஆட்டோ தொழிலாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரையில் வட்டியில்லாத கடனை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றனர்.