Last Updated : 16 Apr, 2021 03:12 AM

 

Published : 16 Apr 2021 03:12 AM
Last Updated : 16 Apr 2021 03:12 AM

20 ஆண்டுகளாக நடக்கும் நிலம் கையகப்படுத்தும் பணி: வேகமெடுக்காத மதுரை-தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டம்

தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் நடைபெறும் புதிய ரயில்பாதைக்கான பணி (கோப்பு படம்)

மதுரை

மதுரை-தூத்துக்குடிக்கு அருப்புக் கோட்டை வழியாக புதிய ரயில் பாதை திட்டம் அறிவிக்கப்பட்டு 20 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் நிலம் கையகப்படுத்தும் பணிகூட முடிவடை யாமல் உள்ளது.

மதுரை-தூத்துக்குடி இடையே தற்போதுள்ள 159 கி.மீ. தூர ரயில் பாதை நெல்லை வழித்தடத்தில் வாஞ்சி மணியாச்சி வரை சென்று அங்கிருந்து மீளவிட்டான் வழியாக தூத்துக்குடியை சென்றடைகிறது. பேருந்து பயணத்தைவிட ரயில் பயணம் ஒரு மணி நேரம் கூடுதல் என்பதுடன் தூரமும் அதிகம். மேலும் இந்த வழித்தடத்தில் அதிக ரயில்கள் இயங்குவதால் கிராசிங்குகளும் அதிகம். எனவே அருப்புக்கோட்டை வழியாக மதுரை–தூத்துக்குடி இடையே புதிய அகல ரயில் பாதை திட்டம் கொண்டு வரப்பட்டது.

கடந்த 1999-2000-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அருப்புக்கோட்டை வழியாக மதுரை-தூத்துக்குடி இடையே புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி மதுரை ரயில் நிலையத்தில் இருந்து திருப்பரங்குன்றம், பாறைப்பட்டி, ஆவியூர், காரியாபட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, புதூர், நாகலாபுரம், விளாத்திகுளம், குளத்தூர், மேலமருதூர், வாலசமுத்திரம், சில்லாநத்தம், சாமிநத்தம், தட்டப்பாறை, மீளவிட்டான் வழியாக தூத்துக்குடி ரயில் நிலையம் வரை சுமார் 143 கி.மீ.க்கு புதிய அகல ரயில் பாதை அமைக்க ஆய்வு செய்யப்பட்டது. மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களை உள்ளடக்கியது இத்திட்டம்.

கிடப்பில் இருந்த இத்திட்டத்தில் தற்போது மீளவிட்டானில் இருந்து மேல்மருதூர் வரை ரயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. ஆனாலும் மேல்மருதூர்- திருப்பரங்குன்றம் வரை நிலம் கையகப்படுத்துவதில் தொடரும் தாமதத்தால் பணியில் தொய்வு நிலை உள்ளது. நிதி ஒதுக்கீடு, நிலம் கையகப் படுத்தும் பணிகளை துரிதப்படுத்த மக்கள் பிரதிநிதிகள் ஆர்வம் காட்ட வேண்டும் என கோரிக்கை எழுத்துள் ளது.

ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: மதுரை-தூத்துக்குடி இடையேயான 143 கி.மீ. தூரத்தில் தூத்துக்குடி-மீளவிட்டான் வரை ஏற்கெனவே ரயில் பாதை உள்ளது. அருப்புக்கோட்டை வழியாக மீளவிட்டான்-திருப்பரங்குன்றத்துக்கு சுமார் 134 கி.மீ. தொலைவுக்கு புதிய பாதை அமைக்க வேண்டும். மதுரை-தூத்துக்குடி இடையே 10 புதிய ரயில் நிலையங்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் மூலம் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை வெளியூர்களுக்கும், துறைமுகத்துக்கும் கொண்டு செல்ல வசதியாக இருக்கும். அருப்புக்கோட்டை முக்கிய சந்திப்பு நிலையமாக மாற்றப்படும்.

இத்திட்டத்துக்கென மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து சுமார் 840 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த வேண்டும், இன்னும் இது முழுமை பெறவில்லை. தூத்துக்குடியில் மட்டுமே 80 ஹெக்டேர் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீள விட்டான்-மேல்மருதூர் வரையிலான பணி 2021 ஜூலைக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். மேல்மருதூர்-அருப்புக்கோட்டை-திருப்பரங்குன்றம் வரை நிலம் கையகப்படுத்தும் பணி தொடர்ந்து நடக்கிறது. அருப்புக் கோட்டை-மதுரை வரையிலும் நிலம் கையகப்படுத்தும் பணி தாமதத்தால் பாதை அமைக்கும் பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், வருவாய்த் துறையினர் நிலம் கையகப்படுத்தும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்றனர்.

விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூரிடம் கேட்டபோது, ‘‘இத்திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி முழுமையாக முடிய வேண்டும். அப்போதுதான் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க முடியும். மாவட்ட நிர்வாகங்கள் மூலம் அதிமுக அரசு அதற்கான நடவடிக்கை எடுக்காததால் இத்திட்டத்தை முடிக்க முடியாத சூழல் உள்ளது. தமிழகத்தில் புதிதாக அமையும் அரசிடம் இதுபற்றி வலியுறுத்தப்படும். இந்த புதிய ரயில் திட்டத்துக்கு தேவையான நிதியை ஒதுக்க மத்திய அரசிடமும் வலியுறுத்துவேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x