

தேனியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் போடி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் புகார் மனு அளித்தார்.
தேனி மாவட்டத்தில் போடி உள்ளிட்ட 4 தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், போடி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ஹெச்.கிருஷ்ணன் உன்னியிடம் நேற்று புகார் மனு அளித்தார்.
பின்னர் தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வாக்கு எண்ணும் மையத்தில் ஏப்.14-ம் தேதி நள்ளிரவு 1.30 மணி அளவில் சுமார் 15 நிமிடம் கண்காணிப்பு அறையில் உள்ள கணினிகள் இயங்கவில்லை. இதனுடன் இணைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலமே வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகளும், கட்சியினரும் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், கணினி இயங்காதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மையம் அமைந்துள்ள பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. எனவே ஜெனரேட்டர், இன்வெர்ட்டர் உள்ளிட்ட மாற்று ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும். இம்மையத்தில் சுற்றி அமைக்கப்பட்டுள்ள முள்வேலி சிதிலமடைந்துள்ளது. எனவே, நான்கு பக்கமும் காவல்துறையின் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும்.
போடி தேர்தல் அலுவலர் வழங்கிய 17ஏ, 17சி படிவங்களில் உள்ள தகவல்களும், பதிவான வாக்குகளுக்கும் வித்தியாசம் உள்ளது. வாக்குச் சாவடி எண் 197, 280, 57ஏ ஆகியவற்றில் இதுபோன்ற குளறுபடிகள் உள்ளன. இதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். சரி செய்ய முடியாதபடி குளறுபடிகள் இருந்தால் மறுதேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.