

குணச்சித்திர நடிகர் பாலமுரளி மோகன் சென்னையில் புதன்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
‘அள்ளித்தந்த வானம்’, ‘மின்னலே’, ‘பாய்ஸ்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பாலமுரளி மோகன் (54). இவர் சின்னத்திரையில் ‘சதிலீலாவதி’, ‘தென்றல்’, ‘வம்சம்’ உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார். பல விளம்பரப் படங்களிலும் நடித்துள்ள இவர், எல்லோராலும் ‘ஹார்லிக்ஸ் அங்கிள்’ என்று அழைக்கப்பட்டு வந்தார்.
சென்னை புரசைவாக்கம் ரித்தர்டன் சாலையில் இவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். புதன்கிழமை இரவு சின்னத்திரை தொடர் ஒன்றின் படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்தார். வியாழக்கிழமை காலை அவரது படுக்கை அறையை தட்டியபோது கதவு திறக்கவில்லை.
நீண்ட நேரத்திற்கு பிறகும் கதவு திறக்காததால் வீட்டினர் வேப்பேரி போலீஸில் புகார் செய்தனர்.
காவல்துறையினர் விரைந்து சென்று கதவை உடைத்து திறந்து உள்ளே நுழைந்தனர். அப்போது மின் விசிறியில் பாலமுரளி மோகன் பிணமாக தொங்கினார்.
அவரது தற்கொலைக்கு குடும்ப பிரச்சினை காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மரணம் அடைந்த பாலமுரளி மோகனுக்கு சீதாராணி என்ற மனைவியும், உமாசங்கர் என்ற மகனும் உள்ளனர்.