

அரக்கோணம் இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய இருவர் வேலூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சித்தாம்பாடி கவுதம் நகரில் கடந்த 7-ஆம் தேதி இரவு பெருமாள்ராஜபேட்டை, சோகனூர், செம்பேடு பகுதிகளைச் சேர்ந்த இருபிரிவு இளைஞர்களிடையே மோதல் ஏற்பட்டது.
இதில், சோகனூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூனன்(25), செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த சூர்யா (27) ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.
இச்சம்பவம் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இது தொடர்பாக அரக்கோணம் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பெருமாள்ராஜபேட்டை கிராமத்தைச் சேர்ந்த அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் சத்யா(24), அஜித்(24), மதன்(37), சுரேந்தர்(19), நந்தா(20), சாலை கைலாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி(20), பெருமாள்ராஜபேட்டையைச் சேர்ந்த சூர்யா(23) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், இரட்டைக் கொலை வழக்கு தொடர்பாக பெருமாள்ராஜபேட்டை கிராமத்தைச் சேர்ந்த சிவா (32), வேடல் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (23) ஆகியோர் வேலூர் நீதித்துறை நடுவர் 5-வது நீதிமன்றத்தில் இன்று (ஏப்-16) சரணடைந்தனர்.
இருவரையும் வேலூர் மத்திய சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் பிரவீன் ஜீவா உத்தரவிட்டார்.