

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, பேரையூர் தாலுகாவில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களை திண்டுக்கல் அறநிலையத்துறை இணை ஆணையரின் ஆட்சி எல்லைக்குள் மாற்றியதை ரத்து செய்யக்கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரை பேரையூரைச் சேர்ந்த வி.நித்யகல்யாணி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
பேரையூர் பத்திரகாளியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலராக இருந்து வருகிறேன். பேரையூர், உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள கோவில்கள் மதுரை அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலக கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலங்களில் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு, இணை ஆணையர் ஆட்சி எல்லைகளை திருத்தியமைத்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி இதுவரை மதுரை மாவட்ட இணை ஆணையரின் ஆட்சி எல்லைக்கு உட்பட்டிருந்த பேரையூர், உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள அறநிலையத்துறை கோவில்கள், திண்டுக்கல் இணை ஆணையர் ஆட்சி எல்லைக்குள் மாற்றப்பட்டுள்ளது.
திண்டுக்கல் இணை ஆணையர் அலுவலகம் நகருக்கு வெளியே முல்லைப்பாடியில் அமைந்துள்ளது. இங்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. முல்லைப்பாடிக்கு செல்ல மதுரை வழியாக 119 கிலோ மீட்டரும், மதுரை வராமல் 99 கிலோ மீட்டரும் பயணம் செய்ய வேண்டும்.
எனவே, பேரையூர், உசிலம்பட்டி தாலுகா கோவில்களை திண்டுக்கல் இணை ஆணையரின் ஆட்சி எல்லைக்குள் மாற்றி அறநிலையத்துறை ஆணையர் 16.12.2020-ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
அதுவரை அந்த உத்தரவை செயல்படுத்தவும், பேரையூர், உசிலம்பட்டி அறநிலையத்துறை கோவில்களின் ஆவணங்களை திண்டுக்கல் இணை ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பவும் தடை விதித்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி விசாரித்து, மனுவில் பொதுநலன் இல்லை என்று கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.