Published : 15 Apr 2021 08:37 PM
Last Updated : 15 Apr 2021 08:37 PM

200 வார்டுகளில் 3 வகை கண்காணிப்புக் குழுக்கள்; 12,000 களப்பணியாளர்கள், 400 காய்ச்சல் முகாம்கள், 25,000 பிசிஆர் பரிசோதனைகள்: சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று, தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி அதிரடியாகக் களம் இறங்கியுள்ளது.

மண்டல, வார்டு, பகுதி அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு, 12,000 களப்பணியாளர்கள், 400 காய்ச்சல் முகாம்கள் மூலம் களப்பணி முடுக்கி விடப்படுகிறது. தினமும் 25,000 பிசிஆர் பரிசோதனைகள் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று, தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளை நுண் அளவில் செயல்படுத்தி கண்காணிக்கும் வகையில் மண்டல, பகுதி மற்றும் வார்டு அளவில் நியமிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்புக் குழு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆணையாளர் பிரகாஷ் தலைமையில் இன்று (15.04.2021) அம்மா மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆணையர் பிரகாஷ் வடக்கு வட்டாரத்திற்கு உட்பட்ட திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை மற்றும் ராயபுரம் ஆகிய மண்டலங்களைச் சார்ந்த ஒருங்கிணைப்புக் குழு அலுவலர்களிடம் தொற்று பாதித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளை நுண் (மைக்ரோ) அளவில் கண்காணித்துச் செயல்படுத்த மண்டல அளவில் மண்டல அலுவலர் தலைமையில் செயற்பொறியாளர், மண்டல நல அலுவலர், உதவி வருவாய் அலுவலர், பூச்சியியல் வல்லுநர், கால்நடை மருத்துவ அலுவலர், குடிநீர் வாரியப் பகுதி பொறியாளர் மற்றும் காவல் துறை உதவி ஆணையாளர் ஆகியோர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று பகுதி அளவில் கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளை நுண் அளவில் கண்காணித்துச் செயல்படுத்த உதவி செயற்பொறியாளர் தலைமையில் சுகாதார அலுவலர், வரி மதிப்பீட்டாளர், துப்புரவு மேற்பார்வையாளர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், வார்டு அளவில் கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளை நுண் அளவில் கண்காணித்துச் செயல்படுத்த உதவி பொறியாளர் தலைமையில் ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மினி கிளினிக் மருத்துவ அலுவலர், கோட்ட நல அலுவலர், சுகாதார ஆய்வாளர், உரிமம் ஆய்வாளர், வரி வசூலிப்பாளர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் ஆகியோர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுக்கள் நாள்தோறும் தங்கள் பகுதிகளில் களப் பணியாளர்கள் மூலம் வீடுகள் தோறும் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தொற்று அறிகுறி கணக்கெடுப்பு, காய்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள், கரோனா தொற்றுப் பரிசோதனைகள், தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களைக் கண்டறிதல், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துதல், தேவையான இடங்களில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல், மூத்த குடிமக்கள் மற்றும் இணைநோய் பாதித்த நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்தல் போன்ற பணிகளைக் கண்காணித்துச் செயல்படுத்துவார்கள்.

*வீடுகள்தோறும் சென்று கரோனா தொற்று அறிகுறி உள்ளதா எனக் கண்டறிய 12,000 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஒவ்வொரு களப் பணியாளரும் நாள்தோறும் 100 முதல் 150 வீடுகளுக்குச் சென்று கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்தக் களப்பணியாளர்கள் கரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்களை அருகில் உள்ள காய்ச்சல் முகாமிற்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்த வேண்டும், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் அதற்கான வில்லைகள் ஒட்டப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

*மூத்த குடிமக்கள் மற்றும் இணை நோய் உள்ள நபர்கள் குறித்து தகவல்களைக் கணக்கெடுப்பு செய்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க தன்னார்வலர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

மேலும், 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அருகில் உள்ள மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது நகர்ப்புற சமூகநல மையம் அல்லது மினி கிளினிக் ஆகியவற்றை அணுக அறிவுறுத்த வேண்டும்.

*தற்பொழுது, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டு வார்டுகளுக்கு ஒரு காய்ச்சல் முகாம் என நாளொன்றுக்கு 100 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அடுத்த ஒரு வார காலத்திற்குள் ஒரு வார்டிற்கு 2 காய்ச்சல் முகாம் என நாள்தோறும் 400 காய்ச்சல் முகாம்கள் நடத்த ஒருங்கிணைப்புக் குழுக்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த அதிக அளவில் RTPCR முறையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தொற்று பாதித்த நபரைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். தற்பொழுது சென்னை மாநகரில் நாளொன்றிற்கு 16,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை நாளொன்றிற்கு 25,000 பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*கரோனா தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களை வார்டு அளவில் உள்ள சுகாதார ஆய்வாளர் கண்டறிந்து அவர்களுக்குத் தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தொற்று பாதித்த நபர்களின் இல்லங்கள் அல்லது அலுவலகங்கள் போன்ற பகுதிகளில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

*பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா பாதித்த நபர்களுக்கு முதல்நிலை உடற்பரிசோதனை செய்வதற்காக 12 மையங்கள் (Screening Centres) உள்ளன. மேலும், கரோனா பாதித்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் 11,775 படுக்கைகள் கொண்ட 13 கரோனா பாதுகாப்பு மையங்கள் (Covid care centres) உள்ளன.

*கரோனா தொற்று பாதித்த நபர்களின் எண்ணிக்கை மூன்று நபர்களுக்கு மேல் உள்ள தெருக்களில் பழுப்பு நிற வில்லைகளும், கரோனா தொற்று பாதித்த பகுதி என்பதைக் குறிக்கும் வகையில் சிறிய பதாகைகள் அமைக்கப்பட வேண்டும்.

*6 நபர்களுக்கு மேல் கரோனா தொற்று பாதிப்பு உள்ள தெருக்களில் S வகை தடுப்புகள் அமைக்க வேண்டும். 10 நபர்களுக்கு மேல் கரோனா தொற்று பாதித்த தெருக்களில் ஒரு காவலர் உதவியுடன் தடுப்புகள் அமைக்கப்பட்டு அந்தத் தெருக்களில் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும்.

*கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இந்திய அரசால் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்று தடுப்பூசி தமிழ்நாடு அரசால் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பொருநகர சென்னை மாநகராட்சியில் நாளொன்றுக்கு 30,000 நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதனை நாளொன்றிற்கு 60,000 நபர்களுக்குச் செலுத்தும் வகையில், அந்தந்தப் பகுதியைச் சார்ந்த ஒருங்கிணைப்புக் குழுக்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுநாள்வரை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 10,23,890 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கரோனா தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம் அணிதல். பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். தவறும் நபர்களுக்கு மாநகராட்சி வெளியிட்டுள்ள வழிமுறைகளின்படி அபராதம் விதிக்க வேண்டும். பொதுமக்களிடமிருந்து அபராதம் வசூலிப்பது மாநகராட்சியின் நோக்கம் அல்ல.

ஆனால், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாத தனி நபர்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது அபராதமோ அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் இதுநாள் வரை கரோனா பாதுகாப்பு தொடர்பான அரசின் வழிமுறைகளைப் பின்பற்றாத நபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து ரூ.3,71,29,795/- அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

எனவே, மண்டல, பகுதி மற்றும் வார்டு அளவில் நியமிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்புக் குழுக்கள் மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளையும் தவறாமல் பின்பற்றிப் பொதுமக்களை கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும்”.

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் இணை ஆணையாளர் (சுகாதாரம்) ஆல்பி ஜான் வர்கீஷ், ,வடக்கு வட்டாரத் துணை ஆணையாளர் ஆகாஷ், தலைமைப் பொறியாளர், மாநகர நல அலுவலர் மாநகர வருவாய் அலுவலர், வடக்கு வட்டாரப் பகுதிகளின் மண்டல அலுவலர்கள், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், மினி கிளினிக் மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், அலுவலர்கள், உரிமம் ஆய்வாளர்கள் மற்றும் வரி வசூலிப்பாளர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x