

மாநிலங்களவை எம்.பி தேர்தலில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரை சொக்கிகுளத்தைச் சேர்ந்தவர் குருவையா. ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி. இவர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
சட்டப் பேரவைத் தேர்தல்களிலும், மாநிலங்களவைத் தேர்தல்களிலும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மட்டும் போட்டியிடுவதற்கு வசதியாக தனித் தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன.
தமிழகத்தில் பேரவைத் தொகுதிகளில் 46 தனித் தொகுதிகள் உள்ளன.
ஆனால் மாநிலங்களவை எம்பிக்கான தேர்தலில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுவதில்லை. இதனால் மாநிலங்களவையில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு உரிய முக்கியத்துவம் இல்லாத நிலை உள்ளது.
இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பினேன். அந்த மனு சட்டப்பேரவை செயலரின் பரிசீலனைக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.
இருப்பினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நீதிமன்றம் தலையிட்டு மாநிலங்களவை தேர்தலிலும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க தேவையான சட்டத்திருத்தம் செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்து, மனுதாரர் கோரிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டது.