Published : 15 Apr 2021 07:02 PM
Last Updated : 15 Apr 2021 07:02 PM

சென்னையில் பெரியார் ஈவெரா, அண்ணா, காமராஜர் சாலை பெயர் மாற்றம்: தலைமைச் செயலரிடம் திமுக மனு

சென்னையில் பெரியார் ஈவேரா சாலை பெயர் மாற்றம், அண்ணா சாலை, காமராஜர் சாலை, மாமல்லபுரம் சாலை பெயர் மாற்ற முடிவு ஆகியவற்றை நிறுத்தக்கோரி திமுக தலைவர் ஸ்டாலின் சார்பில் தலைமைச் செயலரிடம் மனு அளிக்கப்பட்டது.

திமுக சார்பில் அதன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வில்சன், என்.ஆர்.இளங்கோ மூவரும் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சனை சந்தித்து ஸ்டாலின் கடிதத்தை அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:

“அண்ணா சாலை, பெரியார் சாலை, காமராஜர் சாலை பெயர் வந்த வரலாறு மிகப் பழையது, 1969-ம் ஆண்டு அண்ணா மறைந்தப்பின் ஆட்சிக்கு வந்த திமுக தலைவர், முதல்வர் கருணாநிதி சென்னை மாநகரத்தின் பிரதான சாலையாக இருந்த மவுண்ட் ரோடு என்பதை அண்ணா சாலை என்று பெயர் சூட்டினார்.

பரங்கி மலையை வைத்துத்தான் மவுண்ட் என்கிற பெயரை வைத்து மவுண்ட் ரோடு என்ற பெயர் வந்தது. அதனால் சின்னமலையிலிருந்து பரங்கி மலை வரை மவுண்ட் ரோடு என்றும், சின்னமலையிலிருந்து முத்துசாமி பாலம் வரை அண்ணா சாலை என்றும் கருணாநிதி பெயர் வைத்தார்.

அதேப்போன்று 1975 ஆம் ஆண்டு காமராஜர் மறைந்தவுடன் அதுவரையில் பீச் சாலை என்று அழைக்கப்பட்டு வந்த அந்த சாலைக்கு காமராஜர் சாலை என்று கருணாநிதி பெயர் சூட்டினார். அதற்கு சுவாரஸ்யமான பொறுத்தம் ஒன்றை கருணாநிதி சொல்வார். காமராஜர் சாலையில் அண்ணா சதுக்கமும், அண்ணாசாலையில் காமராஜர் சிலையும் உள்ளது என்று கூறுவார்.

அதேபோன்று 1979-ம் ஆண்டு பெரியார் நூற்றாண்டை ஒட்டி அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு பெரியார் ஈ.வெ.ரா சாலை என்று பெயர் வைத்தார். அதுமுதல் மூன்று சாலைகளும் தலைவர்கள் பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.

ஆனால் திடீரென்று நான்கு நாட்களுக்கு முன் அனைவரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தமிழர்கள் மீது இடியை போடும் வகையில் பெரியார் ஈ.வெ.ரா சாலைக்கு பெயரை மாற்றும் வகையில் கிராண்ட் வெஸ்டர்ன் டிரங் சாலை என்று பெயர் மாற்றி போர்டு வைக்கப்பட்டிருந்தது. அதேப்போன்று அண்ணா பெயர் சூட்டப்பட்ட சாலையின் பெயரை அகற்றுவதற்கும், காமராஜர் சாலை பெயரையும் மாற்றுவதற்கான முயற்சிகள் வருவதாக அறிந்தோம்.

பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதும், அது குறித்து யாரும் மறுப்போ, அரசு தரப்பில் விளக்கமோ அளிக்காத காரணத்தால் திமுக தலைவர் ஸ்டாலின் இதைக்கண்டித்து அறிக்கை வெளியிட்டார். எங்கிருந்து இந்த யோசனை வந்தது, யார் முடிவெடுத்தது என்பது குறித்து கேட்டிருந்தார். அதற்கும் உரிய விளக்கம் அளிக்காததால் திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு கடிதத்தை தலைமைச் செயலருக்கு அளித்துள்ளார். ‘அந்த கடிதத்தை தற்போது தலைமைச் செயலரிடம் அளித்துள்ளோம்.

இதுபோன்ற பெயர் மாற்றம் செய்தது மட்டுமல்லாமல் மாமல்லபுரம் வரை செல்லும் சாலை மகாபலிபுரம் சாலை என்றிருந்தது. அப்போதைய முதல்வர் கருணாநிதிதான் மாமல்லபுரம் சாலை என்று பெயர் மாற்றினார். அந்தச் சாலையின் பெயரையும் மாற்ற முடிவு செய்துள்ளனர். இந்த நான்கு சாலைகளும் சென்னையை ஒட்டியுள்ள பிரதான சாலைகளாகும். இதை மாற்றும் உத்தரவு யாருடைய தூண்டுதலின்பேரில் யாரை திருப்திபடுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதேப்போன்று விமான நிலையத்துக்கு அண்ணா, காமராஜர் பெயர் சூட்டப்பட்டபோது. ஆனால் அவர்கள் பெயர் மறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தில் நாங்கள் கேள்வி எழுப்பியுள்ளோம். மற்ற மாநிலங்களில் அங்குள்ள தலைவர்கள் பெயர்கள் உள்ளது. ஆனால் தமிழகத்தில் அண்ணா, பெரியார், காமராஜர் பெயர் ஏன் இருட்டடிப்பு செய்யப்படுகிறது”.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x