Last Updated : 15 Apr, 2021 06:12 PM

 

Published : 15 Apr 2021 06:12 PM
Last Updated : 15 Apr 2021 06:12 PM

கல்லூரி ஆய்வக உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளராக பதவி உயர்வு வழங்கலாம்: தமிழக அரசின் மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி

மதுரை

கல்லூரிகளில் ஆய்வக உதவியாளர்களாக பணிபுரிவோருக்கு இளநிலை உதவியாளராக பதவி உயர்வு வழங்குவதற்கு எதிராக அரசு சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுரை பாத்திமா கல்லூரி, சோழவந்தான் விவேகானந்தா கல்லூரிகளில் ஆய்வக உதவியாளர்களாக பணிபுரிபவர்களுக்கு அலுவலக உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்த பதவி உயர்வை அங்கீகரிக்க கல்வித்துறை மறுத்த நிலையில் கல்லூரி நிர்வாகம் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதிகள், ஆய்வக உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்களாக பதவி உயர்வு அங்கீகரிக்க கல்வித்துறைக்கு உத்தரவிட்டனர்.

இதை ரத்து செய்யக்கோரி தமிழக உயர் கல்வித்துறை செயலர், கல்லூரி கல்வி இயக்குனர், மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் ஆகியோர் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தன.

கல்லூரி நிர்வாகம் சார்பில், கல்வித்துறை 4.1.1989-ல் பிறப்பித்த அரசாணையில் ஆய்வக உதவியாளர்களை இளநிலை உதவியாளர்களாக நியமிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வக உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்பட்டிருந்தது.

அரசு சார்பில், இளநிலை உதவியாளராக பதவி உயர்வு பெற ஆய்வக உதவியாளர் பணி முதல் படி நிலையல்ல. அப்படியிருக்கும் போது இந்த பதவி உயர்வை எப்படி அங்கீகரிப்பது? எனக் கேள்வி எழுப்பினார்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,

ஆய்வக உதவியாளர்களை இளநிலை உதவியாளர்களாக நியமிக்கலாம் என கல்வித்துறை அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இரு பதவிக்குக்கும் ஒரே சம்பள விகிதம் மற்றும் பணப்பலன்கள் தான் வழங்கப்படுகிறது.

இதனால் ஆய்வக உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்குவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதில்லை. இதனால் இந்த பதவி உயர்வுக்கு அரசு ஆட்சேபனை தெரிவிக்க வேண்டியதில்லை.

பொருந்தாத காரணங்களை கூறி ஒருவரின் பதவி உயர்வுக்கான உரிமையை மறுக்கக்கூடாது. எனவே எந்தக்கோணத்தில் பார்த்தாலும் தனி நீதிபதியின் உத்தரவில் தலையிடுவதற்கு முகாந்திரம் இல்லை. அரசின் மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x