Last Updated : 15 Apr, 2021 04:46 PM

 

Published : 15 Apr 2021 04:46 PM
Last Updated : 15 Apr 2021 04:46 PM

முகக்கவசம் அணியாதவர்கள் சமூகத்தின் எதிரிகள்: புதுவை ஆளுநர் தமிழிசை பேச்சு

புதுச்சேரி

முகக்கவசம் அணியாதவர்கள் சமூகத்தின் எதிரிகள் எனப் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக கரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி முகாம் இன்று (ஏப்.15) நடைபெற்றது.

மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் ஜெய்சிங் விருந்தினர்களை வரவேற்றார். முகாமை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:

''இந்தியாவில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 100-ல் 64 பேர் வாய்க்கும், 20 பேர் கழுத்துக்கும்தான் முகக்கவசம் அணிகின்றனர். வெறும் 16 பேர்தான் வாய் மற்றும் மூக்கை மூடியபடி சரியாக முகக்கவசம் போடுகின்றனர். சரியானபடி முகக்கவசத்தை அணியவில்லை என்றால், கரோனா வைரஸ் எளிதாக நம் உடலுக்குள் சென்றுவிடும்.

முதன்முதலில் பிரதமர் மோடி, ஊரடங்கு அறிவித்தபோது, கரோனா தொற்று பற்றி நமக்கு அவ்வளவாகத் தெரியாது. அச்சமயத்தில் மக்கள் சிரமப்படுவார்கள் எனத் தெரிந்துதான் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏனென்றால், மக்கள் உயிருடனும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த ஒரு வருடமாக கரோனாவுடன் வாழ்ந்து வரும் நமக்கு, அதுபற்றித் தெரிந்துவிட்டது. அதற்கான தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு விஷயம் தெரிந்த பின்னரும், முகக்கவசம் அணியாமல் இருப்பது தவறு. முகக்கவசம் அணியாதவர்கள் சமூகத்தின் எதிரிகள்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் முகக்கவசம் அணியவில்லை என்றால், அவரால் உடனடியாக 46 பேருக்கும், மூன்று வாரங்களில் 406 பேர் வரையும் கரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது. முகக்கவசம் போடவில்லை என்பது, சமூகக் கேடு, சமூக விரோதம்.

புதுச்சேரியில் முகக்கவசம் போடாமல் நடமாட யாருக்கும் உரிமை கிடையாது. உணவு சாப்பிடும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் முகக்கவசத்தைக் கழற்றக் கூடாது. முகக்கவசம் போடவில்லை என்றால், புதுச்சேரி போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள்.

தடுப்பூசி போட்டுக்கொள்வது பாதுகாப்பானது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், அதிகமாக பாதிக்காது. சத்தான, ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுங்கள். சுக்கு, மிளகு, திப்பிலி, இஞ்சி, பூண்டில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி உலகில் வேறு எதிலும் கிடையாது''.

இவ்வாறு ஆளுநர் தமிழிசை பேசினார்.

இந்நிகழ்ச்சியில், ஆளுநரின் ஆலோசகர்கள் சந்திரமவுலி, மகேஷ்வரி, சுகாதாரத் துறை இயக்குநர் மோகன்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் மற்றும் கல்லூரி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x