

ஆரணி அருகே வாங்கிய தின்பண்டங்களுக்குப் பணம் கொடுக்க மறுத்ததுடன் பேக்கரியைச் சூறையாடி, ஊழியர்களைத் தாக்கிய ரவுடி கும்பலைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகே பேக்கரி இயங்குகிறது. செஞ்சி பகுதியைச் சேர்ந்த சுரேந்தர் நடத்தி வரும் இந்த பேக்கரியில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.
தமிழ்ப் புத்தாண்டு என்பதால், நேற்று கூட்டம் அதிக அளவில் இருந்தது. அப்போது, அதே கிராமத்தில் வசிக்கும் இருவர், குளிர்பானம் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட தின்பண்டங்களை வாங்கியுள்ளனர். அதற்குப் பணம் கொடுக்க மறுத்து, ஊழியர்களை ஆபாசமாகத் திட்டி, தாக்கினர்.
மேலும் அவர்கள், செல்போன் மூலம் தொடர்புகொண்டு, தங்களது தரப்பினரை வரவழைத்து, 10க்கும் மேற்பட்டோர் ஒன்றாகச் சேர்ந்து பேக்கரியில் இருந்த பொருட்களைத் தூக்கி வீசியும், அடித்து நொறுக்கியும் சேதப்படுத்தினர். அதேபோல், பணியில் இருந்த ஊழியர்களையும் பலமாகத் தாக்கினர். பின்னர் ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பித்துச் சென்றது.
இதுகுறித்து பேக்கரி மேலாளர் சாத்தையராசு கொடுத்த புகாரின் பேரில் ஆரணி கிராமியக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், பேக்கரியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு, கும்பலில் இருந்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களைத் தேடி வருகின்றனர்.