

நீலகிரியில் முதல் முறையாக மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
வாகனங்களுக்கான எரிபொருளான எண்ணெய் வளம் வேகமாகக் குறைந்துவரும் நிலையிலும், அதனால் ஏற்படும் மாசைக் கட்டுப்படுத்தவும், மின்சார வாகனங்களுக்கு மாற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
மின்சார வாகனங்களை நோக்கிய மாற்றம் என்பது தவிர்க்க இயலாத ஒன்று. மாசுபடுத்தாத, சுத்தமான எரிசக்தியைப் பயன்படுத்தும், சத்தமில்லாத, நவீனமான புதிய தலைமுறை மின்சார வாகனங்களை வாங்க, தற்போது மக்கள் விரும்புகிறார்கள்.
2023- 24க்குள் இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் மின்சார வாகன உற்பத்திக்கு மாறிவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் அனைத்து வாகனங்களும் மின்சார வாகனங்களாக மாற்றப்பட கெடு விதிக்கப்பட்டுள்ளது.
அனைத்துத் தரப்பினரும் விரைவில் மின்சார வாகனத்துக்கு மாறுவதை ஊக்குவிக்க, மின்சார வாகன உற்பத்தி மற்றும் பயன்பாட்டுத் திட்டத்துக்காக (எப்.எ.எம்.இ) மத்திய அரசு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. மின்சார வாகனங்களின் பயன்பாட்டுக்கான உள் கட்டுமான வசதிகளை உருவாக்க இந்தத் தொகை பயன்படுத்தப்படும்.
இந்தியச் சந்தையில் மின்சார வாகனங்களின் பங்கு 0.06%. 2020-ம் ஆண்டில் இந்தியாவில் 1,52,000 மின்சார இருசக்கர வாகனங்களும், 3,400 கார்களும், 600 பேருந்துகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
சார்ஜிங் பிரச்சினை
மின்சார வாகனங்களில் உள்ள முக்கியப் பிரச்சினை சார்ஜிங் மையங்கள். சென்னை போன்ற பெரு நகரங்களிலேயே சார்ஜிங் மையங்கள் போதுமான அளவு இல்லாததால், சிறிய நகரங்களில் வாகனங்களை சார்ஜ் செய்வது பெரும் சவாலாக உள்ளது.
பிற நாடுகளில், மின்சார வாகனங்களில் நிலையான பேட்டரிகள் பொருத்தப்பட்டு, அவற்றை ஒரு நிலையான சார்ஜிங் மையத்தில் சார்ஜ் செய்கிறார்கள். இந்தியாவில் மாற்றத்தக்க பேட்டரி முறையால் இப்பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் முதன்முதலாக மின்சார வாகனங்கள் சார்ஜிங் மையம் அமைக்கப்பட்டுள்ளது. உதகை ஜெம் பார்க் ஓட்டலில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஓட்டல் மேலாளர் பிரதீப் கூறும்போது, ''மின்சார வாகனங்களுக்கு இங்கு சார்ஜ் செய்து கொள்ளலாம். உதகை பிரபல சுற்றுலாத் தலம் என்பதால் பல மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். எங்கள் ஓட்டலில் தங்க வரும் சுற்றுலாப் பயணிகள் பலர் மின்சார வாகனங்களில் வருகின்றனர்.
தற்போது மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், அந்த வாகனங்களை சார்ஜ் செய்ய சார்ஜிங் மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு யூனிட்டுக்கு ரூ.19 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு காரை சார்ஜ் செய்ய சராசரியாக 20 முதல் 30 யூனிட் சார்ஜ் செய்ய வேண்டும். அதன் மூலம் 350- 400 கி.மீ. வரை பயணம் செய்யலாம். இங்கு யார் வேண்டுமானாலும் தங்களின் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்து கொள்ளலாம்'' என்று தெரிவித்தார்.
மின் வாகனக் கொள்கை:
கர்நாடகா, கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் மின்சார வாகனக் கொள்கைகளை வகுத்துள்ளன.
அதன்படி, ஆந்திரா 2024-க்குள் 10 லட்சம் மின்சார வாகனங்களை எட்ட இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.கேரளா 2022-க்குள் 5 லட்சம் மின்சார வாகனங்களை எட்ட இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. மகாராஷ்டிரா 5 லட்சம் மின்சார வாகனங்களை எட்ட இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. தெலங்கானா 100 சதவீதம் மின்சாரப் பேருந்துகளை இயக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.