

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியது. இதனால், மீன்களின் விலை உயர வாய்ப்புள்ளது.
ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரு மாத காலத்துக்கு மீன்கள் இனப்பெருக்கக் காலம் என்பதால், ஆழ்கடலில் விசைப்படகுகள் மூலம் மீன் பிடிப்பதற்கு தமிழகம் மற்றும் புதுவையில் தடை விதிக்கப்படும். அந்தவகையில், இந்த ஆண்டு இன்று (ஏப்.15) முதல் ஜூன் மாதம் 15-ம் தேதி வரையிலான 61 நாட்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் தடைக் காலத்தில் தமிழகத்தில் உள்ள சுமார் 13 கடலோர மாவட்டங்களில் உள்ள கிட்டத்தட்ட 6,000 விசைப்படகுகள் கடலுக்குள் செல்லாது. தமிழகத்தின் வட மாவட்டமான திருவள்ளூர் முதல், தெற்கில் கன்னியாகுமரி வரை தமிழக அரசால் இத்தடைக் காலம் செயல்படுத்தப்படுகிறது. தடையை மீறி மீன் பிடிப்பவர்கள் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம், 1983, பிரிவு 5-ன் கீழ் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கட்டுமரப் படகுகள், ஃபைபர் படகுகள், மோட்டார் அல்லாத படகுகள், நாட்டுப் படகுகள் 3-4 கடல் நாட்டிக்கல் மைலுக்குத்தான் செல்ல முடியும் என்பதால், அந்தப் படகுகள் மூலம் மீன் பிடிக்க இக்காலத்தில் தடையில்லை.
இந்தத் தடைக் காலத்தில் மீன்பிடித் தொழிலை நம்பியுள்ள சுமார் 1.20 லட்சம் குடும்பங்களுக்குத் தமிழக அரசால் ரூ.5,000 நிதியுதவி வழங்கப்படும். இந்தத் தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தத் தடைக் காலத்தில் வலைகளைச் சரிசெய்தல், படகுகளைப் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளில் மீனவர்கள் ஈடுபடுவர். இந்தத் தடைக் காலத்தால் மீன்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, மீன்பிடித் தடைக் காலத்தை ஏப்ரல் - மே மற்றும் அக்டோபர் - நவம்பர் - டிசம்பர் ஆகிய மாதங்களுக்கு மாற்ற வேண்டும் என, பல்வேறு மீனவ அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்து, அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை.