

வட தமிழகத்தில் ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள் என்று திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
அரக்கோணத்தை அடுத்த சோகனூர் பகுதியில் நடைபெற்ற மோதலில் 2 பேர் கொல்லப்பட்ட நிகழ்வில் பாமகவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அந்த பகுதிக்குச் சென்று விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ப.சிவகாமி தலைமையிலான உண்மைகண்டறியும் குழு அறிவித்துள்ளது.
கொல்லப்பட்ட இருவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் இல்லை. அவர்கள் பானை சின்னத்துக்கு ஓட்டு கேட்கவும் இல்லை. இந்தக் கொடிய படுகொலைகளின் பின்னணியில் எந்த அரசியலும் இல்லை என்றும் உண்மை கண்டறியும் குழு கூறியிருக்கிறது. இதையேதான் பாமகவும் தொடக்கத்தில் இருந்தே கூறிவந்தது. பாமகவின் இந்த நிலைப்பாடு மிகவும் சரியானது என்பதை உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை நிரூபித்துள்ளது.
உண்மையை ஆராயாமல் அவதூறு குற்றச்சாட்டுகளை ஆதரித்து அறிக்கைகளை வெளியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அவரது கூட்டணியில் உள்ள பிற கட்சித் தலைவர்களும் தமிழகத்தில் சாதிக் கலவரத்தை ஏற்படுத்தும் சதிக்கு துணை நின்றவர்கள்தான்.
ஸ்டாலினுக்கும், அவரது கூட்டணி தலைவர்களுக்கும் மனசாட்சி என்ற ஒன்று இருந்தால் அதுஅவர்களை உறுத்தும். தாங்கள்செய்த தவறுக்காக பாமகவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கட்டும். தமிழக அரசியல் தலைவர்களிடம் நான் கேட்டுக் கொள்வது ஒன்றுதான். மனசாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள்.
வட தமிழகத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும், அவற்றின் வாயிலாக வளர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், பெரும்பான்மையாக வாழும் சமுதாயங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள். அதற்கு தடையாக இருக்கும் சக்திகளை விரட்டி அடியுங்கள். அதுதான் அறம்.
மாறாக, பிளவை ஏற்படுத்தி அதில் பிழைப்பு நடத்தும் சக்திகளையே ஆயுதமாக ஏந்தி, அந்தஆயுதத்தை அப்பாவி வன்னியர்கள் மீது ஏவுவீர்கள் என்றால் நீங்கள் நடத்துவது அரசியல் அல்ல. அழித்தொழிப்பு. உங்கள் நாடகம் இப்போது அம்பலமாகி விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.