அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினர் விரட்டியடிப்பு: மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மோதல்

மதுரை தல்லாகுளத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினரை விரட்டியடிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்.படம்: கிருஷ்ணமூர்த்தி
மதுரை தல்லாகுளத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினரை விரட்டியடிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்.படம்: கிருஷ்ணமூர்த்தி
Updated on
1 min read

மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்ற பாஜகவினரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியது.

டாக்டர் அம்பேத்கரின் 130-வது பிறந்தநாளையொட்டி மதுரை தல்லாகுளம் பகுதியிலுள்ள அவரது சிலைக்கு நேற்று பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்தனர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று காலை 10.30 மணியளவில் மதுரை புறநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா.சுசீந்திரன், அக்கட்சியின் எஸ்சி, எஸ்டி பிரிவு மாவட்டச் செயலர் ரவி உட்பட 20-க்கும் மேற்பட்டோர் மாலை அணிவிக்க வந்தனர்.

அப்போது அங்கு கூடியிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், சிலைக்கு மாலை அணிவிக்கக் கூடாது எனக் கூறி பாஜகவினரை தடுத்தனர். மேலும், அவர்களுக்கு எதிராக முழக்கமிட்டதோடு பாஜகவினர் கையில் வைத்திருந்த மாலைகளைப் பிடுங்கி எறிந்து கம்பால் அடித்து அவர்களை விரட்டியடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் பாஜகவினரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பாஜகவினர் தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதற்கிடையே பிற்பகல் 12.55 மணிக்கு மதுரை நகர பாஜக தலைவர் கேகே. சீனிவாசன் தலைமையில் பாஜகவினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

சிபிஐ விசாரணை தேவை

தல்லாகுளம் அம்பேத்கர் சிலைக்கு நேற்று மாலை அணிவித்த விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரக்கோணம் இரட்டைக் கொலை விசாரணை முழுமையாக நடக்கவில்லை. இதனால், இக்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்.

ரெம்டெசிவர் மிக முக்கியமான மருந்து. அதை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ததால் தட்டுப்பாடு நிலவுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மருந்துக்கான உள்ளூர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in