

தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சுவாமிமலை முருகன் கோயிலில் நேற்று திருப்படி பூஜை நடைபெற்றது. இதில், பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று தீபம் ஏற்றி வழிபட்டனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் 4-வது படைவீடாக திகழும் தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில், தமிழ் வருட தேவதைகள், தங்களின் பெயர்களுடன் 60 படிகளாக அமர்ந்து, சுவாமிநாத சுவாமிக்கு சேவை செய்வது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும்.
இக்கோயிலில், ஆண்டுதோறும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று தமிழ் வருட தேவதைகள் பெயருடன் அமைந்துள்ள 60 படிகளுக்கு திருப்படி பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு தமிழ்ப் புத்தாண்டு தினமான நேற்று திருப்படிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், பிலவ ஆண்டுக்குரிய படிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. அப்போது, இந்த ஆண்டில் மழைவளம் வேண்டியும், வறட்சி நீங்கி தானிய விளைச்சல் பெருகவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.
இந்நிகழ்வை முன்னிட்டு, நேற்று அதிகாலை மூலவர் சுவாமிநாத சுவாமி நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம், தங்கக் கவசம், வைரவேல் அலங்காரம் நடைபெற்றது. இதில், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.