

நீலகிரி மாவட்டம் உதகையில் குதிரை பந்தயம் நேற்று தொடங்கியது.
நீலகிரி மாவட்டம் உதகையில் கோடை சீசனின் முக்கிய நிகழ்வான குதிரைப் பந்தயம் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தமிழ்ப் புத்தாண்டு அன்று தொடங்கி ஜூன் மாதம் வரை நடைபெறும். இந்த ஆண்டு 134-வது குதிரைப் பந்தயம் நேற்று (ஏப்ரல் 14) தொடங்கியது. பந்தயங்கள் ஜூன் மாதம் 11-ம் தேதி வரை நடக்கவுள்ளது. வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் மொத்தம் 18 நாட்கள் பந்தயங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குதிரைப் பந்தயத்தில் பங்கேற்க பெங்களூரு, சென்னை உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 500 பந்தயக் குதிரைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. முக்கிய பந்தயமான ‘நீலகிரி டர்பி’ மே 21-ம் தேதியும் ‘நீலகிரி தங்கக் கோப்பை’ போட்டிமே 22-ம் தேதியும் நடக்கிறது.
முதல் நாளான நேற்று 7 போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் புத்தாண்டு கோப்பைக்கான போட்டியில் 8 குதிரைகள் பங்கேற்றன.
போட்டியில் ‘கிறிஸ்டலினா’ என்ற குதிரை வெற்றி பெற்றது. இதில் ஜாக்கி சி.ஏ.பிரிஸன் சவாரி செய்தார். வெற்றி பெற்ற குதிரையின் பயிற்சியாளர் பி.சுரேஷ், உரிமையாளருக்கு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. கரோனா பரவல் காரணமாக அனைத்து குதிரைப் பந்தயங்களும் பார்வையாளர்கள் இல்லாமல் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.