

செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்த களத்தூர் ஏரியின் தூர்ந்துபோன பாசனக் கால்வாயை, சீரமைக்கும் பணியில் விவ சாயிகளே ஈடுபட்டனர். எனினும், போது மான நிதி இல்லாததால், அந்த பணியை தொடர முடியாமல் தவிக் கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்த களத்தூரில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 1,850 ஏக்கர் பரப்பளவில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏரியின் பிரதான நீர்வரத்து கால்வாயாக நீஞ்சல் மடுவு உள்ளது. நீஞ்சல் மடுவில் திறக்கப்படும் தண்ணீர், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மலையையொட்டி அமைக்கப்பட்ட களத்தூரான் கால்வாய் மூலம் பொன் விளைந்த களத்தூர் ஏரியை வந்தடையும்.
இதன் மூலம், 5,800 ஏக்கர் விளை நிலத்தில் மூன்றுபோகம் விவசாயம் நடைபெற்றது. இதனாலேயே இக்கிராமத் துக்கு பொன்விளைந்த களத்தூர் என பெயர் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக பருவமழை இல்லாததால் ஏரி, குளங்கள் வறண்டு காணப்பட்ட நிலையில், வடகிழக்கு பருவமழை ஒருமாதம் கொட்டித் தீர்த்தது.
இதனால், ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறியதால் நீஞ்சல் மடுவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதை தொடர்ந்து களத்தூரான் கால்வாயில் பொதுப்பணித் துறையினர் தண்ணீர் திறந்துவிட்டனர். இதனால், பொன் விளைந்த களத்தூர் ஏரி நிரம்பிவழிந்தது. இதனால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், ஏரியில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் செல்லும் பாசனக் கால்வாய்கள் அனைத் தும் தூர்ந்துபோய் உள்ளதால், கால் வாய்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக, பாசனக் கால்வாய்களை தூர்வாரி சீரமைக் கும் பணிகளை விவசாயிகள் தாங்க ளாகவே மேற்கொண்டுள்ளனர். தற்போது, போதிய நிதிவசதியில்லாததால் பணிகளை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, விவசாயி மோகன் கூறியதாவது: எங்கள் ஊர் ஏரியின் மூலம் அருகில் உள்ள உதயம்பாக்கம், குண்ணப்பட்டு, கோரப்பட்டு, ஆனூர், மணப்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கு, விவசாயத்துக்கு தண் ணீர் செல்லும் வகையில் பாசனக் கால்வாய்கள் ஆங்கிலேயர் காலத்தி லேயே அமைக்கப்பட்டன.
இந்தக் கால்வாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும், ஏரியின் முதன்மை பாசனக் கால்வாய் முற்றிலும் தூர்ந்துள் ளது. இதை தூர்வாரி சீரமைத்தால், ஆயிரக்கணக்கான விளைநிலங்கள் பாசன வசதிபெறும். பலமுறை வலி யுறுத்தியும் இந்த பணியை பொதுப் பணித்துறை மேற் கொள்ளவில்லை.இதனால், பல ஆண்டுகள் கழித்து மூன்று போகம் விளையும் என்ற நம்பிக்கையில் இருந்த விவசாயிகள், தற்போது கவலைய டைந்துள்ளனர் என்று அவர் கூறினார்.
இதுகுறித்து, முன்னோடி விவசாயி சண்முகம் கூறியதாவது: பாசனக் கால்வாயை தூர்வார பொதுப்பணித் துறையினர் முன்வராத தால், விவசாயிகள் ஒன்றிணைந்து கால் வாயை தூர்வார முடிவு செய்தோம். பொக்லைன் இயந்திரம் மூலம் பணிகள் நடந்தன.
ஆனால், பொக்லைன் இயந்திரத்துக்கு வாடகை செலுத்த பணம் இல்லை. அதனால், பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. சுமார் 5 கி.மீ. நீளம் உள்ள பாசனக் கால்வாயை 2 கி.மீ. நீளத்துக்கு நாங்கள் சீரமைத்துள்ளோம். மீதமுள்ள கால்வாயை தூர்வாருங்கள் என பொதுப்பணித் துறையிடம் முறையிட்டால் பாசனக் கால்வாயை தூர்வார தற்போது எங்கள் துறையில் நிதியில்லை என்கின்றனர். அதனால், இயற்கை தந்த மழைநீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.
திருக்கழுக்குன்றம் பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் பிரபுவிடம் கேட்டபோது, “ஏரிநீரை பயன் படுத்துவோர் பாசனக் கால்வாயில் மராமத்து போன்ற பணிகளை அவ்வப் போது செய்ய வேண்டும். ஆனால், மழையில்லாததால் அவர்களும் அதை செய்யவில்லை. தற்போது ஏரி நிரம்பி யுள்ளதால் பாசனக் கால்வாயை தூர்வார கோரியுள்ளனர். பாசனக் கால்வாயை தூர்வாருவதற்கென நிதியில்லை. அதனால், நீர்வள நிலவளத் திட்டத்தில் நிதி ஒதுக்குமாறு பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. விரைவில் கால்வாய்கள் சீரமைத்து தரப்படும்” என்றார்.