

சேலம் அருகே 14 சக்கர கிரேன் வாகனத்தில் ஏற்பட்ட தீ விபத்தின்போது, கிரேனில் இருந்து கீழே குதித்து தப்ப முயன்ற கிளீனர் தலையில் அடிபட்டு உயிரிழந்தார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தனக்கு சொந்தமான ரூ.8 கோடி மதிப்பிலான 14 சக்கரங்கள் கொண்ட கிரேன் வாகனத்தை வாடகைக்கு விட்டு வருகிறார்.
இவரது கிரேன் வாழப்பாடி அருகேயுள்ள தனியார் தொழிற்சாலை பணிக்கு கொண்டு வரப்பட்டது. கும்பகோணம் பாபநாசம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் பத்திரநாத் (40), பிஹாரைச் சேர்ந்த கிளீனர் ஹேமந்த் (24) மற்றும் டெல்லியைச் சேர்ந்த சமீம் அகமத் (32) ஆகியோர் உடன் இருந்தனர்.
நேற்று முன்தினம் பணிகளை முடித்து விட்டு நேற்று அதிகாலை 12.30 மணி அளவில் கிரேன் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. கிரேனை பத்திரிநாத் ஓட்டினார்.
அயோத்தியாப்பட்டணம் கருமாபுரம் பகுதியில் வந்தபோது, கிரேன் திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது, கிரேன் மேல் பகுதியில் இருந்த சமீம் அகமத் கீழே குதித்து தப்ப முயன்றார். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார். மற்ற இருவரும் வாகனத்தை நிறுத்தி விட்டு கீழே இறங்கி உயிர்தப்பினர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற வாழப்பாடி தீயணைப்பு நிலைய வீரர்கள் கிரேனில் ஏற்பட்ட தீயை 3 மணி நேரம் போராடி கட்டுப்படுத்தினர். இதில், கிரேன் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. இதுதொடர்பாக காரிப்பட்டி போலீஸார் விசாணை நடத்தி வருகின்றனர்.சேலம் அயோத்தியாப்பட்டிணம் அருகே தீவிபத்தில் முற்றிலும் எரிந்து உருக்குலைந்த கிரேன் வாகனம்.