Published : 15 Apr 2021 03:10 AM
Last Updated : 15 Apr 2021 03:10 AM

பாதசாரிகளுக்கு உகந்ததாக வடிவமைத்தாலும் தொடர் கண்காணிப்பு, நடவடிக்கை இல்லாததால் நடைபாதைகள் ஆக்கிரமிப்பு: மாநகராட்சியின் அலட்சியத்தால் அச்சத்துடன் செல்லும் பொதுமக்கள்

சென்னை மாநகராட்சி சார்பில் பாதசாரிகளுக்கு உகந்த வகையில் நடைபாதைகளை வடிவமைத்தாலும், தொடர் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை இல்லாததால் பெரும்பாலான நடைபாதைகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன.

சென்னை மாநகராட்சியில் 378 கி.மீ. நீள பேருந்து தடச் சாலைகள், 1,292 கி.மீ. நீள சிமென்ட் கான்கிரீட் சாலைகள் உள்ளடங்கிய 5 ஆயிரத்து 623 கி.மீ. நீள உட்புறச் சாலைகளை மாநகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது.

சைதை துரைசாமி மேயராக இருந்தபோது, மோட்டார் வாகனம் இல்லாத போக்குவரத்துக் கொள்கையை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டது. அதில், பொதுமக்கள் எளிதில் நடந்துசெல்ல ஏதுவாக நடைபாதைகளை மாற்றுவது, மிதிவண்டிகளுக்கு தனி பாதைகள் உள்ளிட்ட திட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்தக் கொள்கை அடிப்படையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தியாகராய நகர் பகுதியில் நடைபாதை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாநகரின் பல்வேறு பகுதிகளில் சுமார் 2 மீட்டருக்கும் அதிகமான அகலம் கொண்ட நடைபாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் மீது விலை உயர்ந்த கிரானைட் கற்கள், அவற்றில் வாகனங்கள் செல்வதை தடுக்க கிரானைட் தூண்கள் போன்றவை அமைக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு பெசன்ட்நகர், மயிலாப்பூர், ராயப்பேட்டை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், எழும்பூர், வடசென்னையில் கொடுங்கையூர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட சாலைகளில், அகலமான நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஓராண்டாக மாநகராட்சி நிர்வாகம் கரோனா தடுப்பு, வெள்ள நிவாரணம், தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், அதை சாதகமாகப்பயன்படுத்திக்கொண்டு, நடைபாதைகளை ஆக்கிரமித்து காய்கறி, பழக் கடைகள், தேநீர் கடைகள், வாகன பழுது பார்த்தல், துரித உணவகங்கள் போன்றவை நடத்தப்பட்டு வருகின்றன. பலர் தங்களது இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களையும் நடைபாதைகளில் நிறுத்திவிடுகின்றனர்.

இதனால், பொதுமக்கள் நடைபாதைகளில் செல்ல முடியாமல், மோட்டார் வாகனங்கள் வேகமாகச்செல்லும் சாலைகளில் அச்சத்துடன் பயணம் செய்கின்றனர். இது வாகன ஓட்டிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, நடைபாதை திட்டத்தில் மாநகராட்சி நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தற்போதைய வாழ்க்கை முறை மாற்றத்தால், நடக்கக்கூட வாய்ப்பில்லாத நிலையில், பணி நிமித்தம் நடைபாதைகளில் நடக்கும் வாய்ப்பையாவது மாநகராட்சி வழங்க வேண்டும். இனியும் மாநகராட்சி அலட்சியமாக இல்லாமல் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற, கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதே அனைவரது கோரிக்கையாகும்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "சிலர் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரம் என்ற பெயரிலும், நடைபாதை வியாபாரிகள் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்ட விதிகளைக் கூறியும், நீதிமன்ற அனுமதி பெற்று கடைகளை நடத்துகின்றனர். அவர்களை மாநகராட்சி நிர்வாகத்தால் அகற்றமுடியவில்லை. இந்நிலையில், ஆக்கிரமிப்பு அகற்றும் அதிகாரம் தற்போது அந்தந்த மாநகராட்சி மண்டலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. எனவே, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற மண்டல அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x