

பணியின்போது இறந்த தீயணைப்பு துறை வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில், நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தீ விபத்தை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி 200 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது. இப்பேரணியை தீயணைப்புத் துறை இயக்குநர் முனைவர் சி.சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார்.
மும்பை கப்பல் விபத்து
இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த காலம் 1944-ம் ஆண்டு ஏப்ரல் 14-ல் 1,200 டன் வெடிபொருட்கள், எண்ணெய் ட்ரம்களை சுமந்தபடி மும்பை துறைமுகத்துக்கு வந்த கப்பலில் வெடிவிபத்து ஏற்பட்டது.
அந்தக் கப்பல் மட்டுமின்றி, அருகிலிருந்த வேறு கப்பல்களும், கட்டிடங்களும் தீக்கிரையாகின. அதில் மும்பை துறைமுகத்தைச் சேர்ந்த 66 தீயணைப்பு வீரர்களுடன் 231 பேர் உயிரிழந்தனர். இந்த துயர நிகழ்வின் நினைவாகத்தான், வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 14-ம் தேதி நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
அந்த வகையில், நேற்று தமிழகம் முழுவதும் உள்ள, தீயணைப்பு நிலையங்களில், நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தாம்பரத்தில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாநில பயிற்சி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில், தீயணைப்புத் துறை இயக்குநர் சி.சைலேந்திர பாபு உள்ளிட்ட அதிகாரிகள், மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினர்.
இதில் கூடுதல் இயக்குநர் (செயலாக்கம் மற்றும் பயிற்சி) எஸ். விஜயசேகர், வட மண்டல இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன் மற்றும் மாநில பயிற்சி மைய இணை இயக்குநர் மீனாட்சி விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ‘தீத்தடுப்பு சாதனங்களை முறையாக பராமரிப்பதே தீ விபத்துகளை தடுப்பதற்கு வழியாகும்’ என்ற தலைப்பில் தீ விபத்தை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சுமார் 50 பேர் கலந்து கொண்ட 200 கிமீ தூர சைக்கிள் பேரணியை சி.சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார்.
இந்த பேரணியானது தாம்பரம் மாநில பயிற்சி மையத்தில் தொடங்கி பெரும்புதூர், காஞ்சிபுரம், மாமல்லபுரம் சென்று மீண்டும் தாம்பரம் மாநில பயிற்சி மையத்தில் நிறைவடைந்தது.