

தமிழகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டு 252 போலீஸார் உயிரிழந்துள்ளனர். அதைத் தொடர்ந்து போலீஸார் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோது மருத்துவர்கள், துப்புரவு ஊழியர்கள், போலீஸார் ஆகியோர் முன்களப் பணியாளர்களாக இருந்தனர். இதனால் முன்களப் பணியில் ஈடுபட்ட போலீஸார் உட்பட பலருக்கும் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இவ்வாறு தமிழகம் முழுவதும் 8 ஆயிரம் போலீஸார் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், அதிகபட்சமாக சென்னையில் மட்டும் சுமார் 3,300 போலீஸார் பாதிக்கப்பட்டனர். இதேபோல் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும் தொற்று ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட போலீஸாரில் பலர் குணமடைந்து மீண்டனர். அதேநேரம் 252 போலீஸார் உயிரிழந்ததாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணிக்கை மேலும் கூடுவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் போலீஸார் தங்களதுஉடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். விழிப்புடன் இருக்கும்படியும் போலீஸாருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தற்காலிக மையம்
காவல் நிலையங்களுக்கு வெளியே ஒரு தற்காலிக மையம் அமைத்து, புகார் கொடுக்க வருபவர்களிடம் அங்கேயே புகார்களை பெற வேண்டும். அவசியம் இருந்தால் மட்டும் முகக்கவசம் அணிந்தவர்களை காவல் நிலையத்துக்குள் அனுமதிக்க வேண்டும். சானிடைசர், கை கழுவ தண்ணீர் வைத்திருக்க வேண்டும். போலீஸாரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். விசாரணையின்போதும்கூட சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
இந்த விதிமுறைகளை அனைத்து காவல் நிலையங்களிலும் பின்பற்ற டிஜிபி ஜே.கே.திரிபாதி பரிந்துரைத்துள்ளார். இதன்பேரில் அனைத்து காவல் நிலையங்களுக்கும் காவல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் பொது இடங்களில் மக்கள் கரோனா விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா என்பதை போலீஸார் தீவிரமாக கண்காணிக்கவும் அதே நேரத்தில் பொது மக்களை அடிக்கக் கூடாது என்றும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.