Published : 14 Apr 2021 10:04 PM
Last Updated : 14 Apr 2021 10:04 PM

மதுரையில் களைகட்டிய கரோனா தடுப்பூசி திருவிழா: ஆர்வமாக திரண்ட பொதுமக்கள்

மதுரை

மதுரை மாநகராட்சி சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் கரோனா தடுப்பூசி திருவிழா நடந்தது.

இதில் பொதுமக்கள் ஆர்வமாக வந்து கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

உலகளவில் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. மதுரையில் சென்ற ஆண்டு கரோனாவின் தாக்கம் குறைவாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு கரோனாவின் இரண்டாவது அலை தாக்கத்தின் வேகம் 2.6 சதவீதமாக உள்ளது. தினமும் 200க்கும் மேற்பட்டோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால், இந்த தொற்று நோயால் பாதிக்கப்படும் பொதுமக்கள், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய உள்ளது.

காமராஜர் பல்கலைக்கழகத்தில் சுகாதாரத்துறை புதிதாக நேற்று கரோனா சிகிச்சை மையம் அமைத்துள்ளது. அங்கு 500 நோயாளிகள் சிகிச்சை பெறலாம். இதுதவிர கூடுதலாக பூட்டிக்கிடக்கும் கல்லூரிகளில் சிகிச்சை மையங்களை தொடங்கலாமா? என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசிக்கின்றனர்.

மற்றொரு புறம் பொதுமக்களை தடுப்பூசி போட வைக்க விழிப்புணர்வு செய்யப்படுகிறது. அதன் ஒரு கட்டமாக நேற்று மதுரை மாநகராட்சியும், பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட்டும் இணைந்து மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் கரோனா தடுப்பூசி திருவிழா நடத்தியது. மாநகராட்சி ஆணையாளர் விசாகன், இந்த தடுப்பூசி திருவிழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:

கரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அதை தவிர வேறுவழியில்லை. முகக்கவசம், தனிமனித இடைவெளியை பின்பற்றாத நிறுவனங்கள், பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

கரோனா தடுப்பூசிகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்படுகிறது. மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் 16ம் தேதி வரை மூன்று நாட்கள் தடுப்பூசி திருவிழா முகாம் நடைபெறுகிறது.

ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு நண்பர்கள், உறவினர்கள், அருகில் உள்ளவர்களை அனைவரையும் தடுப்பூசி போட்டு கொள்வதற்கு அறிவுரை வழங்க வேண்டும். எந்தவித பக்கவிளைவும் ஏற்படுத்தாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நமது உயிருக்கு ஒரு பாதுகாப்பு அரணாக இந்த தடுப்பூசி விளங்கும். 45 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் தங்களையும், தங்கள் குடும்பத்தையும், சமுதாயத்தையும் கரோனா நோயிலிருந்து காத்துக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மதுரை மாநகராட்சியின் 31 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 9 மினி கிளினிக்குகள் மூலம் கரோனா தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. தினந்தோறும் சிறப்பு காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x