

கரோனா பாதிப்புக்கு ஆளான தேர்தல் பார்வையாளரை காரில் அழைத்துச் சென்ற மதுரை ஆட்சியரை தனிமைப்படுத்தக்கோரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழக்கறிஞர் மனு அளித்துள்ளார்.
மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரியிடம், மதுரை அண்ணாநகர் வழக்கறிஞர் எஸ்.முத்துக்குமார் அளித்த மனு:
தேர்தல் பணிக்காக சில நாட்களுக்கு முன்பு மதுரை வந்த போலீஸ் பார்வையாளர் தரம் வீர் யாதவ் கரோனா தொற்றுக்கு ஆளானார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அரசு ஓட்டுனர் மறுத்ததால், மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன், தனது காரில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
பின்னர் கரோனா சிறப்பு வார்டில் முககவசம் அணியாமல் ஆட்சியர் இருந்துள்ளார். பொதுமக்களிடம் சமூக இடைவெளியை பின்பற்றவும், முககவசம் அணியவும் வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாவட்ட ஆட்சியர், அவற்றை பின்பற்றாமல் இருந்துள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கரோனா பாதிப்புக்கு உள்ளான போலீஸ் பார்வையாளருடன் தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனை செய்துகொள்ள சுகாதாரத்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஆட்சியர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் உடனடியாக பணிகளை கவனித்தார். கரோனா பரிசோதனையும் அவர் செய்து கொள்ளவில்லை.
அரசு கூட்டங்களிலும் பங்கேற்றார். தேர்தல் பணிகளை பார்வையிட்டார். எனவே, மதுரை ஆட்சியரை தனிமைப்படுத்தவும், கரோனா பரிசோதனை செய்து கொள்ளவும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளருக்கு கார் ஓட்ட மறுத்த அரசு ஓட்டுனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.